கோயில் நிலங்களில் வசிப்போருக்குப் பட்டா வழங்கும் பேச்சுக்கே இடமில்லை என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
திருச்செந்தூர், சமயபுரம், திருத்தணி ஆகிய கோயில்களில் தினமும் 5,000 பேருக்கு உணவு வழங்கும் திட்டம் செப்.16-ம் தேதி தொடங்கப்படவுள்ளது. இதையொட்டி, அதற்கான முன்னேற்பாடுகள் குறித்து சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயிலில் அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, கே.என்.நேரு ஆகியோர் இன்று ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து, திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோயிலில், யானை குளிப்பதற்காகக் கட்டப்பட்டுள்ள குளியல் தொட்டியையும், அதில் யானை அகிலா குளிப்பதையும் பார்வையிட்டனர்.
பின்னர், திருவானைக்காவலில் செய்தியாளர்களிடம் அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறியதாவது:
''திருச்செந்தூர், சமயபுரம், திருத்தணி ஆகிய கோயில்களில் தினமும் 5,000 பேருக்கு உணவு வழங்கும் திட்டம் செப்.16-ம் தேதி தொடங்கப்படவுள்ளது. கோயில்களில் தொகுப்பூதிய அடிப்படையில் 5 ஆண்டுகள் தொடர்ந்து பணியாற்றி வரும் பணியாளர்களைப் பணி நிரந்தம் செய்ய முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதையொட்டி, துறை ரீதியாக அனைத்துத் தகவல்களும் திரட்டப்பட்டு வருகின்றன. விரைவில் பணி நிரந்தர ஆணை வழங்கப்படவுள்ளது. இது தொடர்பாகக் கடந்த ஆட்சியில் 110 விதியின் கீழ் அறிவிப்பு வெளியிட்டனர். ஆனால், நிறைவேற்றவில்லை.
தமிழ்நாட்டில் ஆக்கிரமிப்பில் இருந்த 180 ஏக்கர் கோயில் நிலங்களை இதுவரை மீட்டுள்ளோம். கோயில் நிலம் ஆக்கிரமிப்பு தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் புகார் அளிக்க வேண்டும் என்றிருந்த நிலை, தற்போது சட்டத் திருத்தத்தின் மூலம் மாற்றப்பட்டுள்ளது. இதன்படி, கோயில் நிலம் ஆக்கிரமிப்பு தொடர்பாக யார் வேண்டுமானாலும் புகார் அளிக்கலாம். “இறைவன் சொத்து இறைவனுக்கே” என்ற அடிப்படையில் ஆக்கிரமிப்பில் உள்ள நிலங்களை மீட்கும் பணி தொடர்ந்து மேற்கொள்ளப்படும்.
அறங்காவலர் குழு நியமிக்கப்படாத கோயில்களில் பணிகள் ஒரு நாள்கூட பாதிக்கப்படாத வகையில் தக்கார் நியமிக்கப்பட்டுள்ளனர். அறங்காவலர் குழு நியமனம் தொடர்பான சட்டத் திருத்தமும் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, குழுவின் காலம் 3 ஆண்டுகளில் இருந்து 2 ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அனைவருக்கும் குழு உறுப்பினராக வாய்ப்பு கிடைக்கும். முதல்வரின் வழிகாட்டுதலின்படி சிதிலமடைந்து கிடந்த இந்து சமய அறநிலையத்துறையைச் சீர்படுத்தி வருகிறோம்.
கோயில் நிலங்கள் மன்னர்கள், ஜமீன்தார்கள் தானமாகக் கொடுத்தது. அந்த நிலங்களில் வசிப்போருக்குப் பட்டா கொடுக்க முடியாது. மயிலாடுதுறையில் பட்டா கொடுத்தது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு அதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. எனவே, கோயில் நிலங்களில் வசிப்போருக்குப் பட்டா வழங்கும் பேச்சுக்கே இடமில்லை''.
இவ்வாறு அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
ஆய்வின்போது இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன், மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு, சட்டப்பேரவை உறுப்பினர்கள் லால்குடி அ.சவுந்தரபாண்டியன், துறையூர் (தனி) எஸ்.ஸ்டாலின் குமார், ஸ்ரீரங்கம் எம்.பழனியாண்டி, மண்ணச்சநல்லூர் எஸ்.கதிரவன் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.