இந்த ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டில் தமிழக திட்டங்களுக்கு ரூ.2 ஆயிரத்து 64 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தாம்பரத்தில் 3வது முனையம் அமைக்கும் பணிகள் வரும் ஜூனில் முடிவடையும் என தெற்கு ரயில்வே பொது மேலாளர் வசிஷ்டஜோக்ரி தெரி வித்துள்ளார்.
மத்திய ரயில்வே பட்ஜெட் தொடர்பாக தெற்கு ரயில்வே பொதுமேலாளர் வசிஷ்டஜோக்ரி சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:
22 பாலங்கள்
இந்த நிதி ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டில் தமிழக திட்டங்களுக்கு மொத்தம் ரூ.2 ஆயிரத்து 64 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புதிய பாதைகள் அமைக்க ரூ.50.37 கோடியும், அகலப்பாதை திட்டத் துக்கு ரூ.332 கோடியும், இரட்டை பாதை திட்டத்துக்கு ரூ.113 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மேலும், கடன்மூலம் முதலீடு திரட்டி ரயில் திட்டப்பணிகளை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் சபரிமலை இடையே 201 கி.மீ. புதிய பாதை, மொரப்பூர் தருமபுரி இடையே 36 கி.மீ. புதிய பாதை அமைக் கப்படவுள்ளது. ரூ.202 கோடி செலவில் 73 சுரங்கப் பாதைகளும், ரூ.550 கோடி செலவில் 22 ரயில்வேச் மேம்பாலங்களும் அமைக்கப்படும்.
செங்கோட்டை புனலூர், காரைக்குடி புதுக்கோட்டை இடையே அகலப்பாதை திட்டம், சென்னை கடற்கரை கொருக் குப்பேட்டை இடையே 3, 4-வது பாதை அமைத்தல், எண்ணூர் கொருக்குப்பேட்டை இடையே 4-வது பாதை அமைத்தல் உள் ளிட்ட பணிகளுக்கு நிதி ஒதுக்கப் பட்டுள்ளது. ரயில் நிலையங்களில் அடிப்படை வசதிகளை மேம் படுத்த ரூ.63 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நாட் டிலேயே முதல் முறையாக வாலாஜாபாத்தில் ‘ரயில் ஆட்டோ ஹப்’ அமைக்க திட்டமிடப் பட்டுள்ளது. இதன்மூலம் துறை முகங்களுக்கு ரயில்கள் மூலம் வாகனங்களை கொண்டு செல்ல முடியும்.
மாநில அரசுகளுடன் இணைந்து ரயில்வே திட்டங்களை செயல்படுத்த ரயில்வே துறை முடிவெடுத்துள்ளது. அதன் அடிப்படையில் ஏற்கெனவே கேரளா, கர்நாடகா ஆகிய மாநில அரசுகளுடன் ஒப் பந்தம் போட்டு பணிகளை தொடங்கவுள்ளோம். தமிழகத்தில் ஒப்பந்தம் மேற்கொள்வதற்கான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகின்றன. ஒப்பந்தம் மேற் கொண்ட பிறகு ரயில்வே திட்டப்பணிகள் மற்றும் புறநகர் மின்சார ரயில் நிலையங்களை மேம்படுத்தும் பணிகள் மேற் கொள்ளப்படும்.
தாம்பரத்தில் 3-வது முனையம்
தாம்பரத்தில் 3-வது முனையம் அமைக்கும் திட்டப்பணிகளுக்கு இந்த பட்ஜெட்டில் ரூ.10.63 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டப்பணிகளை வரும் ஜூன் மாதத்தில் முடிக்க திட்டமிட்டுள்ளோம். ராயபுரத்தில் முனையம் அமைப்பது தொடர்பாக தொடர்ந்து ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
சென்னை கன்னியாகுமரி இடையே இரட்டை பாதைகள் அமைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், சென்னை மதுரை இடையே இரட்டை பாதை அமைக்கும் பணிகள் 2017 மார்ச்சில் முடிவடையும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த சந்திப்பின்போது தெற்கு ரயில்வே கூடுதல் பொதுமேலாளர் ஆர்.வெங்கடசாமி, தலைமை மேலாளர் (இயக்கம்) எஸ்.அனந்த ராமன், சென்னை கோட்ட ரயில்வே மேலாளர் அனுபம்சர்மா, மக்கள் தொடர்பு தலைமை அதிகாரி டி.லட்சுமணன் உட்பட பலர் உடனிருந்தனர்.