தமிழகம்

நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு அந்தந்த மாவட்டத்திலேயே உளவியல் ஆலோசனை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் 

செய்திப்பிரிவு

நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு அந்தந்த மாவட்டங்களிலேயே உளவியல் ஆலோசனை வழங்கத் திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ். வளாகத்தில் இன்று (14-09-2021) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டார்.

அப்போது அவர் கூறியதாவது:

''சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த தனுஷ் என்கிற மாணவன் ஏற்கெனவே இரண்டு முறை நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெறாமல், இந்த ஆண்டு மூன்றாவது தேர்வை எதிர்கொள்ள இருந்த நிலையில், இந்தத் தேர்விலும் தேர்ச்சிபெறாமல் போய்விடுவோமோ என்ற அச்சத்தின் காரணமாக தன் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். உண்மையிலேயே இது மிகப்பெரிய பேரிழப்பாகும். அக்குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

உடனடியாகத் தமிழக முதல்வர், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலினை அனுப்பி, அக்குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவியும், ஆறுதலையும் தெரிவிக்கச் செய்தார். என்னதான் பணமும், ஆறுதலும் தெரிவித்தாலும்கூட, போன உயிர் என்பது வராது. நாம் தொடக்கத்திலிருந்து கூறுவது மாணவர்கள் இதுபோன்ற தவறான முடிவுகளை எடுக்கக் கூடாது என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

மாணவர்கள் தற்கொலை போன்ற தவறான முடிவுகளை எடுப்பது மிகுந்த வருத்தத்திற்குரியது. தேர்வு முடிவுகள் எப்படி வந்தாலும், அதைப் பற்றிக் கவலைப்படாமல், அடுத்தடுத்து முன்னேற வேண்டும், முயல வேண்டும் என்ற எண்ணம்தான் மாணவர்களிடையே ஏற்பட வேண்டும்.

தமிழக முதல்வரின் ஆணையைப் பெற்று, தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில், தேர்வு எழுதிய மாணவர்களுக்கு அந்தந்த மாவட்டங்களிலேயே உளவியல் ஆலோசனை என்கிற வகையில் நிகழ்ச்சிகளை நடத்தத் திட்டமிட்டுள்ளோம்''.

இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்

SCROLL FOR NEXT