தருமபுரி மாவட்டம் தொப்பூர் அருகே 4 லாரிகள் மோதிக்கொண்ட விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.
உருளைக்கிழங்கு பாரம் ஏற்றிய லாரி ஒன்று நேற்று (செப். 13) இரவு தருமபுரியைக் கடந்து சேலம் நோக்கி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. தொப்பூர் கணவாய் பகுதியைக் கடந்து புதூர் அருகே சென்றபோது, இந்த லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து, முன்னால் சென்ற கண்டெய்னர் லாரி மீது மோதியது. இதில், கண்டெய்னர் லாரி சாலையிலேயே கவிழ்ந்தது.
தொடர்ந்து, சாலையோரம் நின்றிருந்த செப்டிக் தொட்டி சுத்தம் செய்யும் லாரி மீது மோதியது. அதன் பின்னர், வேலி அமைப்பதற்கான கல் பாரம் ஏற்றிச் சென்று கொண்டிருந்த லாரி மீது மோதி சாலையோரம் 20 அடி பள்ளத்தில் விழுந்தது. மோதிய வேகத்தில், கல் பாரம் ஏற்றிச் சென்ற லாரியும் பள்ளத்தில் விழுந்தது.
இந்த விபத்தில், செப்டிக் தொட்டி சுத்தம் செய்யும் லாரியில் இருந்த திருச்சி மாவட்டம் எடமலைப்பட்டிபுதூரை சேர்ந்த அழகர்சாமி மகன் ரத்தினவேல் (24) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அந்த வண்டியில் இருந்த 12 தொழிலாளர்கள் காயமடைந்தனர். மேலும், விபத்துக்குக் காரணமான லாரியின் ஓட்டுநரான சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த செட்டிமாங்குறிச்சியை சேர்ந்த செங்கோடன் மகன் சித்தையன் (40), என்பவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மற்ற 2 லாரிகளின் ஓட்டுநர்களும் காயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் தருமபுரி அரசு மருத்துக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தால் சுமார் 4 மணிநேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொப்பூர் போலீஸார் மற்றும் பாளையம் சுங்கச்சாவடி பணியாளர்கள் இணைந்து, விபத்தில் சிக்கிய வாகனங்களை அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர்.
விபத்து பற்றி தொப்பூர் போலீஸார் விசாரணை நடத்துகின்றனர்.