தமிழகம்

பண மோசடி உள்ளிட்ட வழக்குகளில் கைது செய்யப்பட்ட ‘பப்ஜி’ மதனிடம் குற்றப்பத்திரிகை நகல்கள் வழங்கல்

செய்திப்பிரிவு

ஆபாசமாக பேசுதல், பணமோசடி செய்ததாக கைது செய்யப்பட்ட பப்ஜி மதன் மீது சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் 1,600 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் தாக்கல் செய்தனர். அந்த குற்றப்பத்திரிகையின் நகல் மதனிடம் நேற்று வழங்கப்பட்டது.

‘பப்ஜி’ விளையாட்டில் ஆபாசமாக பேசி வீடியோ பதிவேற்றம் செய்ததாகவும், பப்ஜி விளையாட்டை பயன்படுத்தி பணமோசடியில் ஈடுபட்டதாகவும் ‘பப்ஜி மதன்’, அவரது மனைவி கிருத்திகா ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

கிருத்திகா மட்டும் ஜாமீனில் விடுதலையானார். மதன் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதால் அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், மதன் மற்றும் அவரது மனைவி கிருத்திகா மீதான 1,600 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கடந்த ஆகஸ்ட் 12-ம் தேதி தாக்கல் செய்தனர். 32 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது. 150-க்கும் மேற்பட்டோர் புகார் அளித்த நிலையில், 32 பேர் மட்டுமே எழுத்துப்பூர்வமாக புகார் அளித்துள்ளதாகவும் குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.2.89 கோடி மோசடி

கரோனா காலத்தில் உதவி செய்வதாக 2,848 பேரிடம் ரூ.2 கோடியே 89 லட்சம் மோசடி செய்துள்ளதாகவும் காவல்துறை தரப்பில் மதன் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மேலும், மதனின் மனைவி கிருத்திகாவை 2-வது குற்றவாளியாக இந்த வழக்கில் போலீஸார் சேர்த்துள்ளனர். இருவரின் மீதும் மோசடி பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்துக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மதன், கிருத்திகா ஆகியோருக்கு குற்றப்பத்திரிகை நகல்கள் வழங்கப்பட்டன. அதைத் தொடர்ந்து வழக்கு விசாரணையை வருகிற 28-ம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

SCROLL FOR NEXT