தியாகராய நகர் சட்டப்பேரவை உறுப்பினர் ஜெ.கருணாநிதியை மக்கள் தொடர்புகொள்ளவும், மக்கள் குறைகளை விரைவாக தீர்த்து வைக்கவும் நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.
மக்கள் தங்கள் குறைகளை கூற ஒரு பிரத்யேக வாட்ஸ்-அப் எண், மின்னஞ்சல் முகவரி, க்யூஆர் குறியீடு ஆகியவை ஓர் அட்டையில் அச்சிடப்பட்டுள்ளன. அந்த அட்டை தி.நகர் தொகுதியில் உள்ள அனைத்து இல்லங்களிலும் நேரடியாக வழங்கப்பட்டு வருகிறது.
இதைப் பயன்படுத்தி மக்கள் தங்களின் குறைகள், புகார்களை தெரிவிக்கலாம். இதில் மக்கள் தெரிவிக்கும் குறைகளை சீர்செய்ய மற்றும் கண்காணிக்க பன்னாட்டு நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் ஜேஐஆர்ஏ எனும் மென்பொருள் பயன்படுத்தப்படுகிறது. புகார்களை தீர்த்துவைப்பது மட்டுமல்லாமல் அதற்கு ஆகின்ற நேரம் மற்றும் அதன் தற்போதைய நிலை ஆகியவை இம்மென்பொருள் மூலம் கண்காணிக்கப்படுகின்றன.
தி.நகர் தொகுதியில் உள்ள 130, 132, 133, 134, 140, 141 ஆகிய வட்டங்களுக்கு இம்முறை செயல்படுத்தப்பட்டுள்ளது. 135 மற்றும் 136 ஆகிய வட்டங்களுக்கு விரைவில் செயல்படுத்தப்படவுள்ளது.