மதுரை அரசு ராஜாஜி மருத்துவ மனையில் சென்னைக்கு அடுத்து தென்தமிழகத்திலேயே முதல் முறையாக எலும்பு வங்கி அமைக் கும் பணி நடைபெறுகிறது.
வாகன விபத்துகளில் கை, கால்களில் முறிவு ஏற்படுவோர் மற்றும் எலும்பு புற்றுநோய், பல் வேறு வகை கிருமித் தொற்றால் பாதிக்கப்படும் நோயாளிகள், மதுரை அரசு ராஜாஜி மருத்துவ மனைக்கு அதிகம் வருகிறார்கள்.
அவர்களுக்கு பாதிக்கப்பட்ட எலும்பை அகற்றி விட்டு, மாற்றாக வேறொரு நபரின் எலும்பை பொருத்தவோ அல்லது நிரப்பவோ செய்ய வேண்டும். ஆனால், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் எலும்பு வங்கி இல்லாததால் எலும்பு முறிவு, எலும்பு நோயால் பாதிக்கப்படும் நோயாளிகள் சிகிச்சை கிடைக்காமல் ஏமாற்றம் அடைகின்றனர்.
எலும்பு புற்றுநோயை பொறுத் தவரை பாதிக்கப்பட்ட எலும்பை அகற்றிவிட்டு செயற்கை எலும்பு பொருத்த வேண்டும். ஆனால், எலும்பு புற்று நோய்க்கு, எலும்பு மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கு ‘எலும்பு வங்கி’ அவ சியம்.
தமிழகத்தில் சென்னை அரசு மருத்துவமனையில் மட்டுமே எலும்பு வங்கி உள்ளது. தென் தமிழகத்தில் தனியார் மருத்துவ மனைகளில் கூட எலும்பு வங்கி இல்லை. அதனால், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ‘எலும்பு வங்கி’ அமைக்க 2017-ல் சென்னை மருத்துவக் கல்வி இயக்குநரகம் அனுமதி வழங்கியது. ஆனால், கடந்த 5 ஆண்டுகளாக பல்வேறு காரணங்களால் எலும்பு வங்கி தொடங்கப்படவில்லை.
இந்நிலையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் முதல் முறையாக விபத்துகாயம் மற்றும் எலும்பு முறிவு அறுவை சிகிச்சைப் பிரிவு கட்டிடத்தின் முதல் தளத்தில் எலும்பு வங்கி அமைக்கும் பணி கள் தொடங்கியுள்ளன.
எலும்பு வங்கி ஏன் தேவை
எலும்பு முறிவு சிகிச்சை துறை தலைவர் ஆர்.அறி வாசன் கூறியதாவது: புற்றுநோய் பாதிப்பு, விபத்துகள் மற்றும் கட்டிகள் இருக்கும் எலும்புகளை அகற்றுகிறோம். அதற்கு பதிலாக அந்த இடத்தை நிரப்ப எலும்பு வங்கியில் பாதுகாக்கப்படும் எலும்பை பயன்படுத்தலாம். வங்கியில் 2 விதமாக எலும்புகளை சேகரிக்கிறோம். மூளை சாவு ஏற்படுவோர், விபத்தில் அடிபட்டவர்களின் உறுப்புகள் அகற்றப்பட்டால் எலும்புகளை தானமாக பெறலாம். எலும்பை கிருமி நீக்கி மைனஸ் 80 டிகிரி செல்சியஸில் பல ஆண்டுகள் பாதுகாக்கலாம். அதற்கான உபகரணங்கள், தடையில்லா மின்சாரம் அமைக்கும் பணி நடக்கிறது என்றார்.