அண்ணாவின் நுங்கம்பாக்கம் இல்லத்தை நினைவு இல்லமாக அறிவிக்க வேண்டும் எனத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, மதிமுக மாநில அவைத் தலைவர் சு.துரைசாமி கடிதம் அனுப்பி உள்ளார்.
இதுகுறித்து மதிமுக மாநில அவைத் தலைவர் சு.துரைசாமி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இன்று அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
''தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பின், அண்ணாவின் பிறந்த நாள் விழா செப்.15ஆம் தேதி நடைபெறுகிறது. திமுக 1958-ம் ஆண்டு பொதுக்குழு உறுப்பினராக இருந்தவர்களில் இன்று நான் மட்டுமே அரசியலில் உள்ளேன். அண்ணா கடைசியாக வாழ்ந்த இல்லம், அவென்யூ 9, நுங்கம்பாக்கம், சென்னை என்பது இன்றைய தலைமுறையினருக்குத் தெரியாது.
அண்ணா உடல் நலம் பாதிக்கப்பட்டபோது, அடையாறு மருத்துவமனையில் அனுமதித்து மருத்துவம் பார்த்தார்கள். அவர் இயற்கை எய்திய பின்னர் அவருடைய உடல் மருத்துவமனையில் இருந்து எடுத்து வரப்பட்டு, நுங்கம்பாக்கம் இல்லத்தில் வைக்கப்பட்டது. பின்னர்தான் சென்னை அரசினர் தோட்டத்திற்கு எடுத்து வரப்பட்டு, பொதுமக்களின் இறுதி அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. அண்ணா கடைசியாக வாழ்ந்த இல்லம், அவர் பூத உடல் வைக்கப்பட்ட இல்லம் அரசுடமை ஆக்கப்படாதது பெரும் குறையாகும்.
முதல்வர் மு.க.ஸ்டாலின், அண்ணாவின் நுங்கம்பாக்கம் இல்லத்தை நினைவு இல்லமாக்க வேண்டும். அண்ணா, கருணாநிதி ஆகியோருடன் நெருங்கிப் பழகியவன் என்ற முறையிலும், அந்த இருவரால் 1967 முதல் 1976 வரை சட்டப்பேரவை உறுப்பினர் ஆக்கப்பட்டவன் என்ற முறையிலும் கேட்கிறேன். அண்ணாவின் பிறந்த நாள் விழா முன் எப்போதும் இல்லாத வகையில் மிகச் சிறப்புடன் இப்போது நடைபெற, பேரறிஞர் அண்ணா கடைசியாக வாழ்ந்த இல்லத்தை நினைவு இல்லமாக அறிவிக்க வேண்டும்''.
இவ்வாறு சு.துரைசாமி தெரிவித்துள்ளார்.