இந்திய அளவில் கரோனா தடுப்பூசி போடுவதில் உத்தரப் பிரதேசத்தின் ஒரு நாள் சாதனையை தமிழகம் முறியடிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.
தமிழகம் முழுவதும் நேற்று நடத்தப்பட்ட மெகா முகாம்களில் ஒரே நாளில் 28,36,776 பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதிகபட்சமாக சென்னையில் 1,85,370 பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
முகாமையொட்டி முன்கூட்டியே 30 லட்சம் தடுப்பூசிகள் அனைத்து மாவட்டங்களுக்கும் பிரித்து அனுப்பப்பட்டிருந்தன. காலை 7 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெற்ற முகாம்களில் மக்கள் ஆர்வமாக வந்து தடுப்பூசிகளைப் போட்டுக் கொண்டனர். பல இடங்களில் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
இந்த நிலையில் தமிழக அரசின் இந்தச் சாதனையை அரசியல் தலைவர்கள் பலரும் பாராட்டியுள்ளனர்.
இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழ்நாட்டில் நேற்று ஒரு நாளில் 40 ஆயிரம் சிறப்பு முகாம்கள் மூலம் 28.36 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தென் மாநிலங்களில் ஒரே நாளில் அதிக எண்ணிக்கையில் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது இதுவே முதல் முறை ஆகும். தமிழக அரசுக்குப் பாராட்டுகள்.
கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் வாராவாரம் நடத்தப்பட வேண்டும். உத்தரப் பிரதேசத்தில் ஒரே நாளில் 33.42 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டதுதான் இந்திய அளவில் சாதனையாக உள்ளது. அந்தச் சாதனையை தமிழ்நாடு அரசு விரைவில் முறியடிக்க வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.