ஈபிஎஸ்: கோப்புப்படம் 
தமிழகம்

மாணவர் தனுஷ் தற்கொலைக்கு திமுக அரசுதான் காரணம்: ஈபிஎஸ் குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

மாணவர் தனுஷ் தற்கொலைக்கு திமுக அரசுதான் காரணம் என, சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் கடந்த ஆக. 13-ம் தேதி பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. 14-ம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, பட்ஜெட் மீதான பொது விவாதம், பதிலுரை நடைபெற்றது. தொடர்ந்து, ஒவ்வொரு துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.

இந்நிலையில், நீட் தேர்வுக்கு விலக்கு பெறும் வகையில் புதிய மசோதா தமிழக சட்டப்பேரவையில் இந்த கூட்டத்தொடரிலேயே நிறைவேற்றப்படும் என, முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்தார். சட்டப்பேரவை கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று (செப். 13) நீட் தேர்வுக்கு விலக்கு பெறும் வகையில் புதிய மசோதாவை முதல்வர் ஸ்டாலின் அறிமுகம் செய்து தாக்கல் செய்தார்.

முன்னதாக, நீட் தேர்வு பயத்தால் மாணவர் தனுஷ் தற்கொலை, திருப்பூர் மாவட்டத்தில் முஸ்லிம் நபர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசினார். இதற்கு முதல்வர் ஸ்டாலின் பதிலளித்தார். இந்நிலையில், முதல்வர் தகுந்த பதிலளிக்கவில்லை எனக்கூறி, ஈபிஎஸ் தலைமையில் அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

இதையடுத்து, ஈபிஎஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

"திருப்பூர் மாவட்டம் வாணியம்பாடி ஜீவா நகரைச் சேர்ந்த முஸ்லிம் நபர் வாசிம் அக்ரம் (40), சமூக ஆர்வலர், குறிப்பிட்ட பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக, வாணியம்பாடி காவல் நிலையத்தில் கடந்த ஜூலை மாதம் புகார் அளித்திருந்தார்.

இந்நிலையில், 10-09-2021 அன்று மாலை மசூதியில் தொழுகை முடித்துவிட்டு தன் மகனுடன் வீடு திரும்பிக் கொண்டிருந்த நிலையில், கூலிப் படையினரால் பயங்கர ஆயுதங்களுடன் கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் மிகுந்த பதற்றத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலைச் சம்பவம், ஊடகங்களில் வெளியானது.

கொலை செய்தவர்களை கண்டறிந்து உடனடியாக அவர்களுக்கு தகுந்த தண்டனை வழங்க வேண்டும் என அவையின் கவனத்துக்குக் கொண்டு வந்தேன். அவருடைய குடும்பத்துக்குத் தேவையான நிதியுதவி, குடும்பத்தில் ஒருவருக்கு கல்வித்தகுதி அடிப்படையில் அரசு வேலை வழங்க வேண்டும் எனவும் கோரியுள்ளேன்.

அதேபோல், நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று திமுக தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தது. திமுக ஆட்சி அமைந்தவுடன் முதல் வேலையாக நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். ஆனால், ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு நீட் தேர்வு ரத்து செய்யப்படவில்லை.

இது தொடர்பாக தெளிவான முடிவையும் அரசு எடுக்கவில்லை. இதனால், மாணவர்களும் பெற்றோர்களும் குழப்பத்துக்கு உள்ளானார்கள். ஜூன் 23-ம் தேதி ஆளுநர் உரையின் போது, இந்தாண்டு நீட் தேர்வு நடைபெறுமா, நடக்காதா என நேரடியாக முதல்வரிடம் கேட்டேன். அதற்கு முதல்வர் மழுப்பலான பதிலை தெரிவித்தார்.

இந்நிலையில், குழப்பமான மனநிலையில் மாணவர்கள் நீட் தேர்வை சந்திக்க வேண்டிய சூழ்நிலை எழுந்ததால், சேலம் மாவட்டம் மேட்டூரைச் சேர்ந்த தனுஷ் என்ற மாணவர் நேற்று தற்கொலை செய்து கொண்டார். இது மிகுந்த வருத்தத்தை தரக்கூடியது. அவரது குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல்.

இதற்குக் காரணம் திமுக அரசுதான். முதல்வரும் அமைச்சர்களும் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என தொடர்ந்து வாக்குறுதி அளித்து வந்ததால், மாணவர்கள் தங்களை முழுமையாக நீட் தேர்வுக்குத் தயார்படுத்திக் கொள்ளவில்லை. இதனால்தான் மாணவர் தனுஷ் தற்கொலை செய்து கொண்டார். இதற்கு முழு பொறுப்பு திமுக அரசுதான். இதற்கு தகுந்த பதிலளிக்காத காரணத்தால் வெளிநடப்பு செய்திருக்கிறோம்.

அதிமுக அரசும் நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி குடியரசுத் தலைவருக்கு அனுப்பியது. அது அப்படியே நிலுவையில் இருந்தது. தவிர நீட் தேர்வு நடத்தப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. தமிழகம் தவிர மற்ற மாநிலங்களில் நீட் தேர்வு எதிர்ப்பின்றி நடத்தப்படுகிறது. நாம் தான் விலக்கு கோருகிறோம்.

திமுக அரசு நீட் குறித்து ஆராய ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைத்தது. அந்த ஆணையம் அரசிடம் அறிக்கை சமர்ப்பித்தது. இந்நிலையில், இது தொடர்பான வழக்கு ஒன்றில் பதில் அளித்த திமுக அரசு, நீட் தேர்வை ரத்து செய்வோம் என எங்கும் சொல்லவில்லை. மாணவர்களையும் பெற்றோர்களையும் ஏமாற்றிய அரசு திமுக அரசு./

அதிமுக தீர்மானத்தை அயோக்கியத்தனமானது என, திமுக எம்.பி. ஆ.ராசா தெரிவித்தார். இது அவர்களுக்குப் பொருந்தும்தானே. உச்ச நீதிமன்ற தீர்ப்பினை அனைத்து மாநிலங்களும் மதித்து செயல்பட்டுத்தான் ஆக வேண்டும். நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது 2010, டிச. 21 திமுக - காங்கிரஸ் கூட்டணி அரசின் போதுதான்".

இவ்வாறு ஈபிஎஸ் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT