விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, காரைக்காலில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த 39 விநாயகர் சிலைகள் நேற்று ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, கிளிஞ்சல்மேடு கடலில் கரைக்கப்பட்டன.
காரைக்காலில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு நேரு நகர், தலத்தெரு உட்பட பல்வேறு பகுதிகளில் இந்து முன்னணி சக்தி விநாயகர் குழு சார்பில் 39 விநாயகர் சிலைகள் கடந்த 10-ம் தேதி பிரதிஷ்டை செய்யப்பட்டு, வழிபாடு நடத்தப்பட்டு வந்தது. ஏழை மாரியம்மன் கோயிலில் தலைமை விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தது.
தொடர்ந்து, நேற்று பிற்பகல் அனைத்து விநாயகர் சிலைகளும் ஏழை மாரியம்மன் கோயில் பகுதிக்கு கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து மேள, தாளங்கள் முழங்க சிலைகளின் ஊர்வலம் புறப்பட்டது.
அமைச்சர் ஏ.கே.சாய்.ஜெ.சரவணன் குமார் ஊர்வலத்தை தொடங்கிவைத்தார். பாரதியார் சாலை, காமராஜர் சாலை உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, கிளிஞ்சல்மேடு கடலில் சிலைகள் கரைக்கப்பட்டன.
மண்டல காவல் கண்காணிப்பாளர்கள் கே.எல்.வீரவல்லபன், ஆர்.ரகுநாயகம் ஆகியோர் தலைமையில் ஏராளமான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.