தமிழகம்

ஓட்டுநர் பயிற்சி பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூல் ஏன்?- நுகர்வோர் அமைப்பினர், பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் கருத்து

செய்திப்பிரிவு

ஓட்டுநர் பயிற்சி பள்ளிகளில் கட்டணம் மாறுபடுவது குறித்து நுகர்வோர் அமைப்பினர், பயிற்சி பள்ளிகளின் உரிமையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் சுமார் 2,000 வாகன பயிற்சி பள்ளிகள் அரசு அனுமதியோடு இயங்கி வருகின்றன. ஒவ்வொரு பள்ளியிலும் பயிற்சியாளர்கள், அலுவலக உதவியாளர் என பலர் பணிபுரிந்து வருகின்றனர். அங்கு அளிக்கப்படும் பயிற்சிக்கும், இதர சேவைகளுக்கும் ஒவ்வொரு பயிற்சி பள்ளியிலும் கட்டணம் மாறுபடுகிறது. இதுதொடர்பாக, கோயம்புத்தூர் கன்ஸ்யூமர் வாய்ஸ் செயலர் லோகு கூறும்போது, “தமிழகத்தில் உள்ள அனைத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களிலும் ஓட்டுநர் உரிமம், பழகுநர் உரிமம், உரிமம் புதுப்பித்தல் உள்ளிட்ட அனைத்து விண்ணப்பங்களும் ஆன்லைன் மூலமாக பதிவு செய்யப்பட்டு, அதற்கான கட்டணமும் ஆன்லைன் மூலமாகவே செலுத்தப்படுகிறது. ஆனால், பெரும்பாலான பொதுமக்கள் இடைத்தரகர் மூலமாகவும், பயிற்சி பள்ளிகள் மூலமாகவும் தங்களது விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவு செய்து, கட்டணத்தை செலுத்துகின்றனர். போக்குவரத்து துறையால் மேற்கொள்ளப்படும் பணிகளுக்கான கட்டணத்தை போக்குவரத்து துறை நிர்ணயம் செய்துள்ளது.

ஆனால், இந்த கட்டணத்துக்கும், ஓட்டுநர் பயிற்சி பள்ளிகளால் அறிவிக்கப்பட்டுள்ள கட்டணத்துக்கும் அதிக வித்தியாசம் உள்ளது. கூடுதல் சேவை கட்டணத்தை தங்கள் இஷ்டம்போல ஓட்டுநர் பயிற்சி பள்ளிகள் வசூலித்துக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளதா என்ற கேள்வி எழுகிறது” என்றார்.

விதிகளின்படி 21 நாட்கள் பயிற்சி

தமிழ்நாடு இலகுரக மற்றும் கனரக பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் நல சங்கத்தின் மாநில தலைவர் சி.வி.சுந்தரேஸ்வரன் கூறும்போது, “ஓட்டுநர் பயிற்சி பள்ளிகளில் அளிக்கப்படும் பயிற்சிக்கு ஏற்ப கட்டணம் மாறுபடுகிறது. சிறிய நகரங்களில் கட்டணம் குறைவாக இருக்கும். பெரிய நகரங்களில் பயிற்சி பள்ளியின் வாடகை, பயிற்சியாளர்களுக்கு அளிக்கும் சம்பளம், பெட்ரோல், டீசல் செலவு, பராமரிப்புச் செலவு, எந்த காரில் பயிற்சி அளிக்கிறோம் ஆகியவை கணக்கிடப்பட்டு அதற்கேற்ப கட்டணத்தை வசூலிக்கிறோம். மத்திய மோட்டார் வாகன விதிகளின்படி பொதுப் போக்குவரத்து அல்லாத இலகுரக வாகனங்களை ஓட்டி பழகுபவர்கள் குறைந்தபட்சம் 21 நாட்கள் ஓட்டிப் பழகியிருக்க வேண்டும். அதேபோல, குறைந்தபட்சம் 10 மணி நேரம் ஓட்டியிருக்க வேண்டும். சிலருக்கு 21 நாட்களுக்கு மேல் பயிற்சி அளிக்க வேண்டியிருக்கும். அவ்வாறு இருப்பின், கட்டணம் வேறுபடும். அரசு இதுவரை பயிற்சி கட்டணம் ஏதும் நிர்ணயிக்கவில்லை. அதை அமல்படுத்துவது கடினம். ஓட்டுநர் பயிற்சி பள்ளி கார்களில் ஓட்டிப் பழகுபவர், பயிற்சியாளர் இருவரும் காரை கட்டுப்படுத்தும் வகையில் இரு கிளட்ச், பிரேக் ஆகியவை இருக்கும். சாலையில் செல்லும்போது பயிற்சி பெறுபவர் சரியாக ஓட்டவில்லையென்றாலும், பயிற்சியாளர் வாகனத்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும். மேலும், பயிற்சி பள்ளிகளில் சாலை விதிகள், சமிக்ஞைகள் குறித்தும், வாகனத்தை எப்படி பாதுகாப்பாக இயக்குவது என்பது குறித்தும் பயிற்சி பெறுபவர்களுக்கு எடுத்துரைக்கிறோம்” என்றார்.

நேரடியாக விண்ணப்பிக்கலாம்

போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறும்போது, “ஓட்டுநர் பயிற்சி பள்ளிகள் மூலம்தான் ஓட்டுநர் உரிமம் பெற விண்ணப்பிக்க வேண்டும் என்பது கட்டாயம் இல்லை. நேரடியாக விண்ணப்பிப்பவர்கள், குடும்ப உறுப்பினர்களின் காரில் பயிற்சி பெற்று விண்ணப்பிக்கலாம். அந்த காரின் பதிவுச் சான்று, வாகன காப்பீடு, மாசுக் கட்டுப்பாட்டு சான்று ஆகியவை நடைமுறையில் இருக்க வேண்டும். யார் வாகனம் ஓட்டிப் பழக்கிவிடுகிறார்களோ அவர், முறையான ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும். காரின் முன், பின் பக்கங்களில், ஓட்டிப் பழகுவதைக் குறிக்கும் ‘எல் போர்டு’ இருக்க வேண்டும். அந்த காரில்தான் அவர்கள் ஓட்டுநர் உரிமம் பெறும்போது ஓட்டிக் காண்பிக்க வேண்டும். சொந்தமாக எடுத்துவரும் வாகனத்தில், வாகன ஆய்வாளர்கள் அமர்ந்து ஓட்டுநர் சரியாக ஓட்டுகிறாரா என்பதை கவனிக்கும்போது ஓட்டுநர் கவனக்குறைவாக ஓட்டினால் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆனால், பயிற்சி பள்ளி வாகனத்தில் இரண்டுபேரிடமும் ‘கன்ட்ரோல்’ இருப்பதால், கவனக்குறைவு ஏற்பட்டாலும் வாகனத்தை ஆய்வாளரால் நிறுத்த முடியும். பயிற்சி கட்டணத்தை வரைமுறைப்படுத்த வேண்டும் எனில், மத்திய மோட்டார் வாகன விதிகளில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும். இதை மத்திய அரசுதான் மேற்கொள்ள வேண்டும். வேண்டுமானால், ஒரு வகுப்புக்கு இவ்வளவு கட்டணம் என பயிற்சி பள்ளிகளை வகைப்படுத்தி கட்டணத்தை அரசு நிர்ணயிக்கலாம்” என்றனர்.

SCROLL FOR NEXT