சென்னையில் வீடுகளில் வைத்து வழிபாடு செய்த கையடக்க விநாயகர் சிலைகளை பொதுமக்கள் நீர்நிலைகளில் கரைத்தனர்.
கரோனா பரவலை கருத்தில்கொண்டு விநாயகர் சதுர்த்தியையொட்டி விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைத்து வழிபட தமிழக அரசு தடை விதித்தது. இருப்பினும், களிமண்ணால் செய்யப்பட்ட கையடக்க விநாயகர் சிலைகளை வீடுகளில் வைத்து வழிபட்டு அருகில் இருக்கும் நீர்நிலைகளில் கரைக்க தமிழக அரசு அனுமதி அளித்தது.
மேலும் அறநிலையத் துறையின் சார்பில் வீடுகளில் வைத்து வழிபடும் விநாயகர் சிலைகளை அருகில் உள்ள கோயில்களில் ஒப்படைத்தால் நீர்நிலைகளில் கொண்டு சென்று கரைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் சென்னை உட்பட தமிழகம் முழுவதும் கடந்த 10-ம் தேதி வீடுகளில் களிமண்ணால் செய்யப்பட்ட கையடக்க விநாயகர் சிலைகளை வைத்து பொதுமக்கள் வழிபட்டனர். இவ்வாறு, வழிபாடு செய்த விநாயகர் சிலைகளை சென்னை வடபழனி முருகன் கோயில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் உள்ளிட்ட கோயில்களில் அன்று மாலையில் ஒரு சிலர் கொண்டு சென்று வைத்தனர்.
ஒரு சிலர் விநாயகர் சிலைகளை 3 நாட்கள் வீடுகளில் வைத்திருந்து வழிபாடு செய்த பின்னர் கரைப்பதற்காக நேற்று மெரினா கடற்கரைக்கு கொண்டு வந்தனர். நேப்பியார் பாலம் முதல் கலங்கரை விளக்கம் வரை விநாயகர் சிலைகளை கரைக்க தடை விதிக்கப்பட்டிருந்ததால், பட்டினப்பாக்கம் கடற்கரைக்கு கொண்டு சென்று களிமண்ணால் செய்யப்பட்ட கையடக்க விநாயகர் சிலைகளை கரைத்தனர். பொதுமக்கள் விநாயகர் சிலைகளை கரைக்க கொண்டு வருவதையொட்டி அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
கோயில்களில் பொதுமக்களால் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகளை போலீஸார் அனுமதியளித்தவுடன் வாகனத்தில் வைத்து மொத்தமாக கொண்டு சென்று நீர்நிலைகளில் கரைப்பதற்கான ஏற்பாடுகள் அந்தந்த கோயில் நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
காவல் ஆணையர் தகவல்
சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சுமார் 343 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. அதே நாளில் பொதுமக்கள் மற்றும் இந்து அமைப்பினரால் 217 சிலைகள் கடற்கரைகளிலும், ஏரி மற்றும் உள்ளூர் குளங்களிலும் கரைக்கப்பட்டன.
எஞ்சியுள்ள 126 சிலைகளில் சனிக்கிழமை 4 சிலைகளும், ஞாயிற்றுக்கிழமை (நேற்று) 122 சிலைகளும் பகுதி வாரியாக கரைக்கப்பட்டன. விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்கள் அமைதியாக நடந்து முடிந்தது.
இவ்வாறு காவல் ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.