தமிழகம்

மாணவி நுழைவுச் சீட்டில் குளறுபடி: நீதிமன்றத்தின் நள்ளிரவு உத்தரவால் நீட் தேர்வு எழுதிய லாரி ஓட்டுநர் மகள்

கி.மகாராஜன்

நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த மதுரை மாணவியின் நுழைவுச் சீட்டில் மாணவன் புகைப்படம் இடம் பெற்றதால் தேர்வு எழுத முடியாத குழப்பமான சூழலில், உயர் நீதிமன்றம் நள்ளிரவில் விசாரித்துப் பிறப்பித்த உத்தரவால் மாணவி நீட் தேர்வு எழுதினார்.

மதுரை ஷெனாய் நகரைச் சேர்ந்தவர் எஸ்.வெங்கடேசன். சரக்கு வாகன ஓட்டுநராக உள்ளார். இவரது மகள் சண்முகபிரியா. இவர் 2020- 21 கல்வியாண்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வில் 91.54 சதவீத மதிப்பெண் பெற்றார். சண்முகபிரியா மருத்துவராகும் விருப்பத்துடன் கடந்த 2 ஆண்டுகளாக நீட் தேர்வுக்குத் தயாராகி வந்தார்.

2021 நீட் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பித்தார். நீட் தேர்வு இன்று (செப்.12) நடைபெற்ற நிலையில் தேர்வு எழுதுவதற்கான நுழைவுச் சீட்டை (அட்மிட் கார்டு) நேற்று ஆன்லைனில் பதிவிறக்கம் செய்தார்.

அந்த நுழைவுச் சீட்டில் வரிசை எண் பெயர், தந்தை பெயர், பாலினம், விண்ணப்ப எண் எல்லாம் சரியாக இருந்த நிலையில், அவரது புகைப்படத்துக்குப் பதில் அலெக்ஸ்பாண்டியன் என்ற மாணவனின் புகைப்படமும், அந்த மாணவனின் கையெழுத்தும் இடம்பெற்றிருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

உடனடிய தேசியத் தேர்வுகள் முகமைக்கு மின்னஞ்சல் வழியாகப் புகார் அனுப்பினார். தொலைபேசி மூலமும் தொடர்பு கொண்டார்.
நடவடிக்கை இல்லாத நிலையில் வழக்கறிஞர் எம்.சரவணன் வழியாக நேற்று மாலை 5 மணிக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் அவசர மனுத் தாக்கல் செய்தார்.

இந்த மனுவை நிர்வாக நீதிபதி எம்.துரைசாமி உத்தரவின் பேரில் நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் நேற்று இரவு 9.15 மணிக்கு விசாரிக்கத் தொடங்கினார். நள்ளிரவு 12.15-க்கு விசாரணை முடிந்தது.

இறுதியில் மாணவி சண்முகபிரியாவை மதுரை வீரபாஞ்சன் சோலைமலை பொறியியல் கல்லூரி நீட் தேர்வு மையத்தில் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

இந்த உத்தரவு நகல் இரவு 1.30 மணியளவில் மனுதாரர் தரப்புக்கு வழங்கப்பட்டது. உயர் நீதிமன்ற உத்தரவையடுத்து மாணவி சண்முகபிரியா இன்று நீட் தேர்வு எழுதினார்.

SCROLL FOR NEXT