தமிழகம்

நீட் தேர்வெழுதும் மாணவர்களைத் தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கும் பணி தொடக்கம்

ஜெ.ஞானசேகர்

நீட் தேர்வெழுத உள்ள மாணவ- மாணவிகளைத் தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கும் பணி காலை 11 மணிக்குத் தொடங்கியது.

நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான நீட் தேர்வு இன்று நடைபெறுகிறது.

தேசியத் தேர்வுகள் முகமை நடத்தும் இந்தத் தேர்வை எழுத, நிகழாண்டில் திருச்சி மாவட்டத்தில் விண்ணப்பித்தவர்களில் 9,105 பேருக்கு அனுமதிக் கடிதம் அனுப்பப்பட்டிருந்தது.

இதில், அரசுப் பள்ளியைச் சேர்ந்த 262 பேர், அரசு உதவி பெறும் பள்ளியைச் சேர்ந்த 241 பேர் ஆகியோரும் அடங்குவர். நீட் தேர்வுக்காகத் திருச்சி மாவட்டத்தில் 21 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், நீட் தேர்வு எழுதுவதற்காகத் தேர்வு மையங்களுக்கு வெளியே தங்கள் பெற்றோருடன் காலை 9 மணி முதல் மாணவ- மாணவிகள் வந்து காத்திருந்தனர். தொடர்ந்து, காலை 11 மணி முதல் தேர்வு மையங்களுக்குள் மாணவ-மாணவிகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

பிற்பகல் 2 மணிக்குத் தொடங்கி மாலை 5 மணி வரை தேர்வு நடைபெற உள்ள நிலையில், பிற்பகல் 1.30 மணி வரை மட்டுமே மாணவ- மாணவிகள் அனுமதிக்கப்பட உள்ளனர்.

தேர்வுக்கூட அனுமதிச் சீட்டு, ஆதார் அட்டை, புகைப்படம் மற்றும் குடிநீர் பாட்டில் ஆகியவற்றை மட்டும் எடுத்துச் செல்ல மாணவ- மாணவிகள் அனுமதிக்கப்படுகின்றனர்.

துப்பட்டா, அணிகலன்கள், பேனா ஆகியவற்றை வெளியிலேயே விட்டுச் செல்ல அறிவுறுத்தப்பட்டனர். மாணவ- மாணவிகள் பெரும்பாலானோர் முகக்கவசம் அணிந்து வந்தனர். முகக்கவசம் இன்றி வந்த ஒரு சிலருக்கு தேர்வு மையத்திலேயே முகக் கவசங்கள் வழங்கப்பட்டன.

SCROLL FOR NEXT