தமிழகம்

2017 மார்ச்சில் தமிழக அரசின் கடன் ரூ.2 லட்சத்து 47 ஆயிரம் கோடியாக இருக்கும்

செய்திப்பிரிவு

தமிழக அரசின் மொத்தக் கடன் 2017 மார்ச் 31-ம் தேதியில் ரூ.2 லட்சத்து 47 ஆயிரத்து 31 கோடியாக இருக்கும் என நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் நேற்று அவர் தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில் இதுபற்றி கூறியிருப்பதாவது:

2016-17-ம் ஆண்டில் ரூ.37,782 கோடி அளவுக்கு கடன் வாங்க தமிழக அரசுக்கு அனுமதி உள்ளது. ஆனாலும், கடன் வாங்குவதை கட்டுப்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. 2016-17-ம் ஆண்டுக்கான நிகர கடன் வாங்குதல் ரூ.35,129 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. வருங்கால வைப்பு நிதி உள்ளிட்ட நிலுவையில் உள்ள கடன் அடுத்த ஆண்டு மார்ச் 31-ல் ரூ.2 லட்சத்து 47 ஆயிரத்து 31 கோடியாக இருக்கும், இது மாநிலத்தின் மொத்த உற்பத்தியில் 19.62 சதவீதம் மட்டுமே.

உலக பொருளாதார வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள மந்தநிலை, 2012-13ல் ஏற்பட்ட வறட்சி ஆகியவை தமிழக பொருளாதாரத்தில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. 2012-13ல் 3.39 சதவீதமாக இருந்த மாநிலத்தின் மொத்த வளர்ச்சி, 2014-15ல் 7.25 சதவீதமாக அதிகரித்தது. நடப்பாண்டில் மாநில மொத்த உற்பத்தி மதிப்பின் வளர்ச்சி 9.13 சதவீதமாக இருக்கும் என மதிப்பிடப்படுகிறது.

மாநிலங்களுக்கு மத்திய அரசு பகிர்ந்தளிக்கக் கூடிய நிகர வருவாயில் தமிழகத்தின் பங்கு குறைந்தது, மானியங்களை காலம்தாழ்த்தி வழங்குவது, திட்டப் பணிகளுக்கான பங்கினை மத்திய அரசு குறைத்தது ஆகியவை தமிழகத்தின் நிதிநிலையை பாதித்துள்ளன. ஆனாலும் செலவுகள் கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளன.

ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் 2017-18ல் அமல்படுத்தப்படும் என கருதப்படுகிறது. எனவே, இந்த ஆண்டைத் தவிர மற்ற ஆண்டுகளில் மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பில் கடன் விகிதம் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு கட்டுப்படுத்தப்படும். தமிழகத்தின் பொருளாதாரத்தை மீண்டும் வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல அரசு அனைத்து நடவடிக்கைகளயும் எடுத்து வருகிறது.

SCROLL FOR NEXT