தமிழகம்

கோகுல்ராஜ் கொலை வழக்கில் 17 பேருக்கு குற்றப்பத்திரிகை நகல் வழங்க நடவடிக்கை

செய்திப்பிரிவு

சேலம் ஓமலூர் பொறியியல் பட்டதாரி கொலை வழக்கு தொடர்பாக நாமக்கல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 720 பக்க குற்றப் பத்திரிகை நகல் இவ்வழக்கில் கைதான 17 பேருக்கு வழங்கப்படவுள்ளது.

சேலம் ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் (24). கடந்த ஆண்டு ஜூன் 24-ம் தேதி கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் (39) உள்ளிட்ட 17 பேரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர்.

இதில், யுவராஜின் தம்பி தங்கத்துரை உள்ளிட்ட 7 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதாகியுள்ளனர். கடந்தாண்டு டிசம்பரில் கோகுல்ராஜ் கொலை வழக்கு தொடர்பான 720 பக்கம் கொண்ட குற்றப் பத்திரிகை நாமக்கல் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், இவ்வழக்கில் கைதான 17 பேரையும் வரும் 16-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சிபிசிஐடி போலீஸாருக்கு நாமக்கல் தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி மலர்மதி உத்தரவிட்டுள்ளார். அன்று நீதிமன்றத்தில் ஆஜராகும் யுவராஜ் உள்ளிட்ட 17 பேருக்கும் குற்றப் பத்திரிகை நகல் வழங்கப்படும் என சிபிசிஐடி போலீஸார் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT