தமிழகம்

தமிழகத்தில் சிறிய கட்சியான பாஜக தலைமையை ஏற்க முடியாது: அன்புமணி ராமதாஸ் திட்டவட்டம்

செய்திப்பிரிவு

தமிழகத்தில் சிறிய கட்சியான பாஜகவின் தலைமையை ஏற்க முடியாது என பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் நேற்று தெரிவித்தார்.

மதுரை மாவட்ட பாமக மகளிர் அணி சார்பில் பழங்காநத்தத்ததில் நேற்று மதுவிலக்கு கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் கலந்துகொள்ள வந்த அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

திமுக, அதிமுக இரண்டு கட்சி களாலும் ஒருபோதும் மதுவை ஒழிக்க முடியாது. முதலில் மதுவைக் கொண்டு வந்ததே திமுகதான். ஆனால், இன்று கருணாநிதியும், மு.க. ஸ்டாலினும் மதுவை ஒழிப்போம் என்கிறார்கள். இதற்கு முன் துணை முதல்வராக இருந்தபோது ஸ்டாலின் மதுவை ஒழித்து இருக்கலாமே. தமிழகத்தில் உள்ள 12 மதுபான உற்பத்தி ஆலைகளில் 6 திமுகவினருக்கும், 3 அதிமுகவினருக்கும், 2 காங்கிரஸ் கட்சியினருக்கும் சொந்தமானவை. பிறகு எப்படி இவர்கள் மது விலக்கைக் கொண்டு வருவர். தமிழக மக்களின் கோபம் தேர்தல் வரை மட்டுமே இருக்கும். தேர்தலுக்கு முந்தைய நாள் கோபம் போய்விடும். இதை பயன்படுத்தித்தான் திமுக, அதிமுக தமிழகத்தை ஏமாற்றி வருகின்றன.

பாமக ஆட்சிக்கு வந்தால் தேவை யில்லாத இலவசங்களை வழங்க மாட்டோம். மாறாக குழந் தைகளுக்கு இலவசக் கல்வி, வேலைவாய்ப்பை உருவாக்குவோம். ஆட்சியில் இல்லாதபோதே, நெடுஞ்சாலைகளில் இருந்த 600 டாஸ்மாக் கடைகளை நீதிமன்றத்துக்குச் சென்று மூடியி ருக்கிறோம். பாமக வெற்றி பெற்றதும் முதல்வராக நான் போடும் முதல் கையெழுத்து பூரண மது விலக்குதான். உலகளவில் மதுவை நம்பி எந்த அரசும் இல்லை. தமிழக அரசுதான் மதுவை நம்பி ஆட்சியை நடத்துகிறது.

திமுக, அதிமுகவை தவிர எங்கள் தலைமையை ஏற்கும் எந்த கட்சிகளுடனும் கூட்டணி வைக்கத் தயாராக இருக்கிறோம். மக்களவைத் தேர்தலில் மோடி பிரதமராக வே ண்டும் என்பதற்காகத்தான் நாங்கள் எங்கள் கருத்துகளை ஒதுக்கி வைத்துவிட்டு ஓரணியில் சேர்ந்து ஆதரவு தெரிவித்தோம். ஆனால், தற்போது நடப்பது சட்டப்பேரவைத் தேர்தல். பாஜக தேசிய கட்சியாக இருக்கலாம். தமிழகத்தில் அது பெரிய கட்சியில்லை. அவர்கள் தலைமையை ஏற்கமாட்டோம்.

பாஜக சிறிய கட்சியாக இருக்கும் வடமாநிலங்களில் மற்ற கட்சிகளின் தலைமையில்தான் தேர்தலை சந்தித்துள்ளது. அதுபோல, பாஜக எங்கள் தலைமையை ஏற்க வேண்டும். மற்ற கட்சிகள் எங்கள் தலைமையை ஏற்று வந்தால் மகிழ்ச்சி. வராவிட்டாலும் மகிழ்ச்சி. எங்கள் பலத்தை நம்பி தனியாக நிற்கிறோம். மற்ற கட்சிகளை போல தேர்தல் பேரம் பேசவில்லை. மதுரை கிரானைட் ஊழல் வழக்கில் திமுக மவுனமாக இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. டிஎன்பிஎஸ்சி நிர்வாகத்தில் நியமிக்கப்பட்ட 11 பேரில் 7 பேர் அதிமுக உறுப்பினர் அட்டை உள்ளவர்கள். 3 பேர் அதிமுக ஆதரவு அதிகாரிகள். இக்குழுவில் ஒரு பெண் கூட இல்லை. இவர்கள் எப்படி தேர்வுகளை நியாயமாக நடத்தி ஆட்களை தேர்வு செய்வார்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT