அரக்கோணம் யார்டு பகுதியில் புதன்கிழமை சரக்கு ரயில் தடம்புரண்டது.
ஆந்திர மாநிலம் ரேணிகுண்டாவில் இருந்து இரும்பு தகடுகள் ஏற்றிய சரக்கு ரயில் 44 பெட்டிகளுடன் செவ்வாய்க்கிழமை சென்னை துறைமுகம் நோக்கி புறப்பட்டது. இந்த ரயில், புதன் கிழமை காலை 4.10 மணியளவில் அரக்கோணத்தை அடைந்தது. மெயின் லைனில் இருந்து யார்டு பகுதிக்கு சரக்கு ரயில் கொண்டு செல்லப்பட்டபோது, சரக்கு ரயிலின் 4 பெட்டிகள் தடம்புரண்டது. சென்னை நோக்கிச் செல்லும் மெயின் லைனில் சரக்கு ரயில் தடம்புரண்டு நின்றதால் காசேகுடா வில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற எக்ஸ்பிரஸ் ரயில், 3 மின்சார ரயில்கள் நடுவழியில் நிறுத்தப் பட்டன. திருத்தணி - சென்னை மின்ரயில் ரத்து செய்யப்பட்டது.
ரயில் தடம்புரண்டதையடுத்து, பெட்டிகள் தனியாக பிரிக்கப்பட்டன. பின்னர், கிரேன் உதவியுடன் தடம்புரண்ட பெட்டிகள் தூக்கி நிறுத்தப்பட்டன. இந்த பணி காரணமாக சென்னை நோக்கிச் சென்ற மின்சார ரயில் மற்றும் காசேகுடா எக்ஸ்பிரஸ் ரயில்கள் சுமார் 2 மணி நேரம் தாமதமாக சென்றன.
கடந்த 15 நாளில் இரண்டாவது முறையாக யார்டு பகுதியில் சரக்கு ரயில் தடம்புரண்டதால் மற்ற ரயில்கள் தாமதமாக சென்றன. எனவே, யார்டு பகுதியில் சரக்கு ரயில் மற்றும் பயணிகள் ரயில் செல்ல தடை விதிக்க வேண்டும் என பயணிகள் விரும்புகின்றனர்.
இதுகுறித்து அரக்கோணம் ரயில் உபயோகிப்பாளர்கள் சங்க துணை பொதுச் செயலாளர் ரகுநாதன் கூறுகையில், அரக்கோணம் ரயில் நிலையத்தில் உள்ள யார்டை மாற்ற வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைத்துவருகிறோம். ஆனால், தெற்கு ரயில்வே நிர்வாகம் இதனை கண்டுகொள்ளவே இல்லை. தற்போதுள்ள யார்டில் ரயில்களை நிறுத்தவே முடியாது. யார்டில் உள்ள தண்டவாளங்கள் மண்ணில் புதைந்துள்ளன. மின்சார ரயிலை நிறுத்த பயன்படுத்திய யார்டு தண்டவாளங்களில் அதிக எடையுள்ள சரக்கு ரயில்களை நிறுத்த நிர்வாகம் முயற்சி செய்கிறது. இதன் காரணமாகவே அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. தற்போதுள்ள யார்டை மேல்பாக்கம் ரயில் நிலையத்துக்கு அருகில் மாற்ற நடவடிக்கை எடுக்கலாம். அங்கு சாய்தளம் உள்ளிட்ட வசதிகள் இருப்பதால் சரக்குகளை எளிதில் ஏற்றி இறக்கி கையாள முடியும்’’ என்றார்.