காரைக்கால் மாவட்டத்தில் நலவழித்துறை சார்பில், சிவப்பு நிற ரேஷன் அட்டைதாரர்களுக்கு பிரதம மந்திரியின் ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்துக்கான அடையாள அட்டை பதிவு செய்யும் பணி பல கட்டங்களாகத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
அதன் தொடர்ச்சியாக, காரைக்கால் அம்மையார் கோயில் வளாகத்தில் உள்ள மண்டபத்தில் இன்று (செப்.11) நடைபெற்ற, பயனாளிகளுக்கான அடையாள அட்டை பதிவு செய்யும் சிறப்பு முகாமை, மாவட்ட ஆட்சியர் அர்ஜுன் சர்மா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளையும் ஆட்சியர் பார்வையிட்டார். அம்மையார் மண்டபத்தில் நாளையும் (செப்.12) இம்முகாம் காலை முதல் மாலை வரை நடைபெறுகிறது.
மேலும், வழக்கம்போல் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், திருநள்ளாறு சமுதாய நலவழி மையம், காரைக்கால் அரசு பொது மருத்துவமனை ஆகிய இடங்களிலும் இப்பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
துணை மாவட்ட ஆட்சியர் (பேரிடர் மேலாண்மை) எஸ்.பாஸ்கரன், நலவழித்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.