காரைக்காலில் இன்று (செப்.11) நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்ற முகாம் மூலம் 446 வழக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டு ரூ.1.17 கோடி வசூல் செய்யப்பட்டது.
தேசிய சட்டப் பணிகள் ஆணையத்தின் உத்தரவின்படி, சென்னை உயர் நீதிமன்றத்தின் வழிகாட்டுதலில் தேசிய மக்கள் நீதிமன்ற முகாம், காரைக்காலில் உள்ள மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது.
மாவட்ட நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணையத்தின் தலைவருமான கே.அல்லி முகாமைத் தொடங்கி வைத்தார். சார்பு நீதிபதி மற்றும் சட்டப் பணிகள் ஆணையச் செயலர் ஜே.அன்வர் சதாத், குற்றவியல் நீதிபதி ஜெ.செந்தமிழ்ச்செல்வன், வழக்கறிஞர் சங்கத் தலைவர் எஸ்.செல்வகணபதி, மாவட்டத் துணை ஆட்சியர் (வருவாய்) எம்.ஆதர்ஷ் உள்ளிட்டோர் தொடக்க நிகழ்வில் கலந்து கொண்டனர்.
ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி மற்றும் நடுவர்கள் முன்னிலையில் வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. காரைக்கால் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமாதானமாகக்கூடிய குற்ற வழக்குகள், காசோலை வழக்குகள், வாகன விபத்து நஷ்ட ஈடு வழக்குகள், குடும்பநல நீதிமன்ற வழக்குகள், உரிமையியல், சிவில் வழக்குகள், தொழிலாளர் தொடர்புடைய வழக்குகள் உள்ளிட்ட 699 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டதில், 442 வழக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டு, சுமார் ரூ.1.15 கோடி வசூல் செய்யப்பட்டது.
மேலும், வங்கிகள் தொடர்பான நேரடி வழக்குகள் 113 எடுத்துக் கொள்ளப்பட்டு 4 வழக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டு ஒரு லட்சத்து 80 ஆயிரம் வசூல் செய்யப்பட்டது.