தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் உள்ளதனியார் உலர்ப்பூ தயாரிக்கும் நிறுவனத்துக்கு ஒட்டப்பிடாரம் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு நேற்று காலை ஒரு வேன் தூத்துக்குடி சென்று கொண்டிருந்தது.
சில்லாநத்தம் கிராமம் அருகே சென்றபோது, வேனும், எதிரே தூத்துக்குடியில் இருந்து புதியம்புத்தூர் நோக்கி வந்த தண்ணீர் லாரியும் நேருக்கு நேர் மோதின. இதில் வேன் உருக்குலைந்தது.
இந்த விபத்தில் வேனில் பயணித்த சில்லாநத்தம் பகுதியைச் சேர்ந்த செல்வராணி (45), ஜோதி (40), முப்பிலிவெட்டியைச் சேர்ந்த சந்தியா (48), நடுவக்குறிச்சியைச் சேர்ந்த மணிமேகலை (20) ஆகிய 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
புதியம்புத்தூர் போலீஸார் காயம்அடைந்த 10 பேரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். லாரி ஓட்டுநரான புதியம்புத்தூர் நயினார்புரத்தை சேர்ந்த பண்டாரம் (41) மீது வழக்கு பதிவுசெய்து லாரியை பறிமுதல் செய்தனர்.