ஆந்திர மாநிலம் - கிருஷ்ணாபுரம் அணையிலிருந்து, கடந்த இரு வாரத்தில் 3-வது முறையாக உபரிநீர் வெளியேற்றப்பட்டதால், திருவள்ளூர் மாவட்டத்தில் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே உள்ள தரைப்பாலங்கள் நீரில் மூழ்கின.
ஆந்திர மாநிலம் - கிருஷ்ணாபுரம் அணை, அம்மாநில பகுதியில் பெய்து வரும் கன மழையால் நிரம்பி வருகிறது. இதனால், கிருஷ்ணாபுரம் அணையிலிருந்து கடந்த மாதம் 25-ம் தேதி இரவு முதல், மறுநாள் அதிகாலை வரை, விநாடிக்கு 750 கன அடி வீதம் சுமார் ஐந்தரை மணி நேரம் உபரிநீர் வெளியேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து, கடந்த 1-ம் தேதி இரவு 9 மணி முதல், மறுநாள் அதிகாலை 4 மணி வரை, விநாடிக்கு ஆயிரம் கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டது.
இந்நிலையில், கடந்த இரு வாரத்தில் 3 -வது முறையாக, நேற்றுமுன்தினம் இரவு கிருஷ்ணாபுரம் அணையிலிருந்து உபரிநீர் திறக்கப்பட்டது. நேற்று முன்தினம் இரவு 10 மணி முதல், நேற்று அதிகாலை 4 மணி வரை, விநாடிக்கு ஆயிரம் கன அடி உபரிநீர் திறக்கப்பட்டது. பிறகு, கிருஷ்ணாபுரம் அணை மூடப்பட்டது.
அவ்வாறு திறக்கப்பட்ட நீர்,திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு பகுதியில் கொசஸ்தலை ஆற்றுக்கு நேற்று முன்தினம் நள்ளிரவு வந்தடைந்தது.
கொசஸ்தலை ஆற்றில் வெள்ளமாய் பெருக்கெடுத்து ஓடும் உபரிநீரால் பள்ளிப்பட்டு வட்டம் - நெடியம், சாமந்தவாடா தரைப்பாலங்கள் மூழ்கின. அதிகாலையில் தரைப்பாலங்களுக்கு மேல், ஓர் அடி உயரத்துக்குச் சென்ற அந்நீர் படிப்படியாகக் குறைந்தது.
இதனால், இரு தரை பாலங்களுக்கு அருகே பாதுகாப்புப் பணியில் வருவாய் மற்றும் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
இந்த வெள்ளநீர், நேற்று மாலை நிலவரப்படி, ஆந்திர மாநிலம் - நகரி, திருவள்ளூர் மாவட்டம் - நல்லாட்டூர், என்.என்.கண்டிகை உள்ளிட்ட பகுதிகளைக் கடந்து, பூண்டி ஏரியை நோக்கி சென்றுக் கொண்டிருந்தது. அந்நீர், இன்று பூண்டி ஏரியை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.