தனியார் சித்த மருத்துவக் கல்லூரி மாணவிகள் 3 பேர் உயிரிழப்புக்கு சில அரசியல் கட்சிகளே முக்கிய காரணம் என விழுப்புரத்தில் நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் குற்றம்சாட்டினார்.
விழுப்புரம் மாவட்டம் கள்ளக் குறிச்சி அருகே எஸ்.வி.எஸ். யோகா இயற்கை மருத்துவ கல்லூரி மாணவிகள் 3 பேர் உயிரிழந்த வழக்கு மற்றும் கல்லூரி முறைகேடுகள் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நேற்று நடைபெற்றது. இந்தப் போராட்டத்துக்கு கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். அப்போது அவர் பேசியதாவது:
தமிழகத்தில் 2008-ம் ஆண்டு திமுக ஆட்சி நடந்தபோதுதான் எஸ்.வி.எஸ். யோகா இயற்கை மருத்துவக் கல்லூரிக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணி இருந்தபோதுதான் இந்த கல்லூரி இயங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. போலியான கல்லூரிக்கு திமுக ஆட்சி எப்படி அங்கீகாரம் அளித்தது? போதிய வசதிகள் இல்லாத இக்கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடத்த டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம் எப்படி கலந்தாய்வு நடத்த ஏற்பாடு செய்தது? இவை அனைத்தும் மர்மமாக உள்ளன.
இந்த கல்லூரியில் கட்டணக் கொள்ளை நடைபெறுகிறது எனக் கூறி மாணவர்கள் வீதிக்கு வந்து போராட்டங்களை நடத்தியபோது விழுப்புரம் மாவட்ட நிர்வாகம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. ஆர்டிஓ தலைமையில் விசாரணை நடத்தி அளிக்கப்பட்ட அறிக்கை மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.
அரசு அதிகாரிகள், முன்னாள், இந்நாள் அமைச்சர்கள், துணை வேந்தர்கள், மாவட்ட ஆட்சியர் என பலர் சம்பந்தப்பட்டு இருப்பதால் மாணவிகள் சரண்யா, பிரியங்கா, மோனிஷா உயிரிழப்பு வழக்கு மற்றும் கல்லூரி முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றார்.
ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய ஜி.ராமகிருஷ்ணன் உட்பட 300 பேரை போலீஸார் கைது செய்தனர்.