தமிழகம்

அண்ணா பிறந்த நாளை மாநில உரிமைகள் தினமாக அறிவிக்க வேண்டும்: விசிக தலைவர் திருமாவளவன் வேண்டுகோள்

செய்திப்பிரிவு

அண்ணா பிறந்த நாளை மாநில உரிமைகள் தினமாக அறிவிக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பெரம்பலூரில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பெரியாரின் பிறந்த தினத்தை சமூக நீதி நாளாக அறிவித்த தமிழக முதல்வருக்கு நன்றி. செப்.17-ம் தேதி தமிழகமெங்கும் பெரியார் சிலைகள் அருகே விசிக சார்பில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு நடைபெறும்.

மாநில உரிமைகளுக்காக இந்திய அளவில் தொடர்ந்து உரிமைக் குரல் எழுப்பி, மாநிலங்களுக்கான உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் எனவும், கூட்டாட்சி தத்துவத்தையும் வலியுறுத்திய பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை மாநில சுயாட்சி தினம் அல்லது மாநில உரிமைகள் தினமாக கொண்டாட தமிழக முதல்வர் அறிவிப்பு வெளியிட வேண்டும்.

சாதிவாரி அடிப்படையில் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் எனும் பலதரப்பட்ட மக்களின் கோரிக்கையை விசிக ஆதரிக்கிறது. அப்படி கணக்கெடுப்பு நடத்துவது அவசியம். இது பல்வேறு பிரச்சினைகளுக்கு விடையளிக்கும். தமிழக முதல்வர் இந்த கோரிக்கை குறித்து பரிசீலிக்க வேண்டும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் அமைக்கப்பட வேண்டும் எனும் விசிகவின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றிய முதல்வருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.

SCROLL FOR NEXT