திருப்பத்தூர் வீட்டு வசதி வாரியம் பகுதி-1-ல் வசிப்பவர் சம்பத்(51). இவர், மின் வாரியத்தில் செயற் பொறியாளராக பணியாற்றி வருகிறார். நேற்று காலை வீட்டில் அவரது மனைவி நந்தினி (47), மகள் ஷாலினி(19) ஆகியோர் மட்டும் இருந்தனர்.
அப்போது, இரு சக்கர வாகனத்தில் 3 பேர் சம்பத் வீட்டுக்கு வந்தனர்.திருப்பத்தூர் நகராட்சி அலுவலகத்தில் தூய்மைப்பணியாளராக பணியாற்றி வருவதாகவும், மின்செயற் பொறியாளர் வீட்டில் கொசு மருந்து அடிக்க வேண்டும் என நந்தினியிடம் கூறியுள்ளனர்.
இதனை நம்பிய நந்தினி அந்த 3 இளைஞர்களை வீட்டுக்குள் அனுமதித்தார். வீட்டுக்குள் நுழைந்த அந்த நபர்கள் முன்பக்க கதவை வேகமாக தாழிட்டு, கத்தியை காட்டி நந்தினி கழுத்தில் அணிந்திருந்த தங்க நகைகளை கழட்டி கொடுக்குமாறு மிரட்டினர். நந்தினி கூச்சலிட்டார்.இதைக்கண்ட மர்ம நபர்கள் நந்தினியை தாக்கிவிட்டு தப்பி யோட முயன்றனர். பொதுமக்கள் மடக்கிப்பிடித்ததில் ஒருவர் மட்டுமே சிக்கினார். மற்ற 2 பேரும் தப்பியோடினர்.இதைத் தொடர்ந்து, பொதுமக்கள் அந்த நபரை பிடித்து திருப்பத்தூர் கிராமிய காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
விசாரணையில், அவர் வாணியம்பாடி அடுத்த நிம்மியம்பட்டு பகுதியைச் சேர்ந்த சிலம்பரசன் (27) என்பதும், அவருடன் வந்தவர்கள் அவரது கூட்டாளிகள் என்பது தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து, கிராமிய காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து சிலம்பரசனை கைது செய்தனர். மேலும், தப்பியோடிய 2 பேரை தேடி வருகின்றனர்.