தமிழகம்

கிசான் திட்டத்தில் பயன் பெற்றிருந்தாலும் தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள விவசாயிகளுக்கு நல வாரிய பலன்கள் வழங்கப்படும்

ஜெ.ஞானசேகர்

கிசான் திட்டத்தில் விவசாயி பயன் பெறும் விவசாயிகள், தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்திருந்தால் அவர்களுக்கும் நல வாரிய பலன்கள் வழங்கப்படும் என்றார் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரியத் தலைவர் பொன்குமார்.

திருச்சியில் உள்ள தொழிலாளர் துறை அலுவலகத்தில், தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரியத் தலைவர் பொன்குமார் இன்று ஆய்வு செய்தார்.

பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியது: தமிழ்நாட்டில் கட்டுமான தொழிலாளர் நல வாரிய பணிகள் கடந்த 10 ஆண்டுகளாக முடங்கிக்கிடந்தன. முதல்வரின் உத்தரவின்படி, 10 ஆண்டுகளாக தேங்கியுள்ள கேட்புமனுக்கள் மீது விரைவாக தீர்வு கண்டு, தொழிலாளர்களுக்கு உரிய பலன்களைக் கொண்டு சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தில் கடந்த 6 மாதங்களாக 15,000 விண்ணப்பங்கள் தேங்கியுள்ளன. இந்த மனுக்களுக்கு விரைவில் தீர்வு ஏற்படுத்தித் தரப்படும் என்று மாவட்ட தொழிலாளர் அலுவலர் உத்தரவாதம் அளித்துள்ளார். தொழிலாளர் அளிக்கும் கேட்பு மனு மீது ஒரு மாத காலத்துக்குள் தீர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற முதல்வரின் உத்தரவை முறையாக பின்பற்ற வேண்டும் என்று அலுவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளேன்.

சிறிய விவசாயிகள் சிலர், விவசாய தொழில் மட்டுமின்றி கட்டிடத் தொழில் உட்பட வேறு தொழில்களிலும் ஈடுபடுவர். தொழிலாளர் நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்துள்ள இவர்களுக்கு நல வாரிய பலன்கள் கிடைக்கும். அதேவேளையில், தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்திருந்தாலும்- கிசான் திட்டத்தில் பயன் பெறும் விவசாயிகளுக்கு தொழிலாளர் நல வாரிய பலன்களை வழங்காமல் இருந்துள்ளனர்.

விவசாயிகளுக்கு கிசான் திட்டத்தில் மத்திய அரசு அளிக்கும் நிதிக்கும், தொழிலாளர் நல வாரிய உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் நிதிக்கும் தொடர்பு இல்லை. எனவே, அவர்களுக்கான நலத் திட்ட பலன்களை வழங்க வேண்டும் என்று அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

புதிய உறுப்பினர் பதிவு உட்பட வாரியத்தின் ஆன்லைன் செயல்பாடுகளை எளிமைப்படுத்த விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். தொழிலாளர் அலுவலகங்களுக்கு கணினிகள் புதிதாக வழங்குவது உட்பட அனைத்து அடிப்படை தேவைகளும் செய்து தரப்படும். அதேவேளையில், தங்களது பணியைச் சரியாக மேற்கொள்ளாத அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

SCROLL FOR NEXT