முன்னாள் எம்எல்ஏக்களுக்கு ரூ.25,000 ஓய்வூதியம் வழங்கும் திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் இன்று பேசும்போது, ''சட்டப்பேரவை உறுப்பினர் நயினார் நாகேந்திரன் பேசுகிறபோது, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு வழங்கப்படக்கூடிய ஓய்வூதியத்தை உயர்த்தித் தரவேண்டுமென்று சொன்னார்கள். ஏற்கெனவே இந்தத் தொகை 20 ஆயிரம் ரூபாயில் இருந்து, 25 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டிருக்கிறது. ஆனால், உயர்த்தப்பட்டது வெறும் அறிவிப்போடு நின்று விட்டது.
அந்த அறிவிப்புதான் இன்று வரையில் இருந்து கொண்டிருக்கிறது. அதற்கு முறைப்படி சட்டப்பேரவையிலே சட்ட முன்வடிவு கொண்டு வந்து நிறைவேற்றி இருக்க வேண்டும். ஆனால், அதை நிறைவேற்றவில்லை. கடந்த ஆட்சி அதைச் செய்யவில்லை. ஆனால், திமுக ஆட்சி அமைந்ததற்குப்பிறகு, - இன்னும் ஒரு நாள்தான் சட்டப்பேரவை நடைபெற இருக்கிறது. திங்கட்கிழமையுடன் அவைக் கூட்டம் முடியவிருக்கிறது.
திங்கட்கிழமை அன்று, ஓய்வூதியத்தை 25 ஆயிரம் ரூபாய் உயர்த்தி வழங்கிடும் வகையில், சட்ட முன்வடிவினை இந்த அவையிலே கொண்டுவந்து, நிறைவேற்றித் தரப் போகிறோம்'' என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.