பேக் டெய்லரிடம் ரூ.10 லட்சம் பறித்த வழக்கில் கைதான பெண் காவல் ஆய்வாளர் வசந்தியின் ஜாமீன் மனுவை மதுரை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
சிவகங்கை மாவட்டம் இளையான்குடியைச் சேர்ந்த பேக் டெய்லரிடம் ரூ.10 லட்சம் பறித்த வழக்கில் மதுரை, நாகமலை புதுக்கோட்டை காவல் ஆய்வாளர் வசந்தி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவர் ஜாமீன் கேட்டு மதுரை மாவட்டக் கூடுதல் மகளிர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதி அனுராதா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் வழக்கறிஞர் வாதிடுகையில், ''மனுதாரருக்கும் பணம் பறிப்பு சம்பவத்துக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. பொய்யாக வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும்'' என்று தெரிவித்தார்.
வசந்திக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என வழக்கறிஞர் முத்துக்குமார் மனுத் தாக்கல் செய்தார். அரசு சார்பில் வழக்கறிஞர் ஏ.கண்ணன் வாதிடுகையில், ''வசந்தி மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. அவரிடம் வெளிநாட்டுப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது குறித்தும் விசாரிக்க வேண்டியதுள்ளது. எனவே ஜாமீன் வழங்கக்கூடாது'' என்று தெரிவித்தார்.
இதையடுத்து வசந்தியின் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.