கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் விசாரணைக்கு ஆஜராவதிலிருந்து குற்றம் சாட்டப்பட்ட ஜம்சீர் அலி மற்றும் ஜித்தின் ஜாய் போலீஸாரிடம் விலக்கு கோரியுள்ளனர்.
நீலகிரி மாவட்டம் கோடநாடு கொள்ளை வழக்கு விசாரணையை போலீஸார் விரைவுபடுத்தி வருகின்றனர். இந்த வழக்கின் 103 சாட்சிகளில் 41 சாட்சிகளிடம் மட்டுமே விசாரணை நடத்தப்பட்ட நிலையில், தற்போது பல சாட்சிகளிடம் மறு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
விசாரணை உதகையில் உள்ள பழைய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தொடர்ந்து நடந்து வருகிறது. குற்றம் சாட்டப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் அவர்களின் தொடர்பில் இருந்த நண்பர்கள் என அனைவரும் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
விபத்தில் உயிரிழந்த கனகராஜின் சகோதரர் தனபால், கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன் ஆகியோரிடம் மறு விசாரணை நடந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்ட 10-வது நபரான ஜித்தின் ஜாயின் உறவினர் ஷாஜியிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
இந்நிலையில், கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தன்று கேரளாவிலிருந்து கோடநாட்டுக்கு குற்றம் சாட்டப்பட்டவர்கள் போர்ட் என்டேவர் மற்றும் இன்னோவா ஆகிய இரு வாகனங்களில் வந்தனர்.
இதில், இன்னோவா வாகனத்தை ஜித்தின் ஜாய் ஓட்டி வந்துள்ளார். அந்த வாகனத்தில் ஜம்சீர் அலி, மனோஜ் சாமி, சந்தோஷ் சாமி ஆகியோர் வந்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களுக்கு வாகனம் வழங்கிய உரிமையாளர் நவ்ஷாத், இடைத்தரகர் நவ்ஃபுல் ஆகிய இருவரிடம் விசாரணை நடந்தது.
வாகனத்தை பெற்ற ஜம்சீர் அலி மற்றும் ஜித்தின் ஜாய் ஆகியோரை விசாரணைக்கு வர தனிப்படை சம்மன் அனுப்பியது. இந்நிலையில், போலீஸாரிடம் விசாரணையிலிருந்து இருவரும் விலக்கு கோரியுள்ளனர்.
ஜம்சீர் அலிக்கு கரோனா நோய் தொற்று ஏற்பட்டுள்ளதாவும், ஜித்தின் ஜாய்-யின் சகோதரி திருமணம் நடக்கவுள்ளதால், விசாரணையிலிருந்து இருவரும் விலக்கு கோரியுள்ளனர்.
நேரடி சாட்சியிடம் விசாரணை
இந்த வழக்கின் நேரடி சாட்சி காவலாளி கிருஷ்ணதாபா. கொலை நடந்த அன்று இவரை கட்டிப்போட்டு குற்றவாளிகள் கொள்ளையில் ஈடுபட்டனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கிருஷ்ணதாபா திடீரென நேபாளம் தப்பிச் சென்றார். அதன் பிறகு நீதிமன்ற உத்தரவுப்படி போலீஸார் நேபாளம் சென்று கிருஷ்ணா தாபாவை அழைத்து வரவுள்ளனர்.
கிருஷ்ணாதாபாவுக்கு இந்தி மொழி மட்டுமே தெரியும் என்பதால், இந்தி தெரிந்த 3 உதவி ஆய்வாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டனர். மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முக்கிய சாட்சியான கிருஷ்ணதாபாவிடம் மீண்டும் விசாரணை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன் பேரில், தனிப்படையினர் நேபாளம் சென்று கிருஷ்ணதாபாவை அழைத்து வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.