பருவமழை தொடங்கவுள்ள நிலையில், காரைக்கால் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள குளங்களை தூர்வார திட்டமிடப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் திருமலைராயன்பட்டினம் பகுதியில் உள்ள 29 குளங்களில், முதல் கட்டமாக 15 குளங்கள் தூர்வாரப்படவுள்ளது. இதையடுத்து கீழவாஞ்சூர் மேலபேட் பகுதியில் உள்ள குளத்தை தூர்வாரும் பணிக்கான பூமி பூஜை இன்று (செப்.9) நடைபெற்றது.
இதில் நிரவி-திருப்பட்டினம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.நாக தியாகராஜன், மாவட்ட ஆட்சியர் அர்ஜூன் சர்மா ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தனர். ரூ.40 லட்சம் செலவில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
குளங்கள் தூர்வாரப்பட்டப் பின்னர் அவற்றை முறையாகவும், தூய்மையாகவும் பராமரிக்க வேண்டும் என சட்டப்பேரவை உறுப்பினரும், மாவட்ட ஆட்சியரும் பொதுமக்களிடம் கேட்டுகொண்டனர்.
உள்ளாட்சித் துறை துணை இயக்குனர் ரேவதி, திருமலைராயன்பட்டினம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.