புளியங்குடியில் சாலையோரம் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகளை பறிமுதல் செய்யும் போலீஸார். 
தமிழகம்

விற்பனைக்கு வைத்திருந்த விநாயகர் சிலைகளை பறிமுதல் செய்த புளியங்குடி போலீஸார்: சமூக வலைதளங்களில் வீடியோ வெளியானதால் திரும்ப ஒப்படைப்பு

செய்திப்பிரிவு

தென்காசி மாவட்டம் புளியங்குடியில் சாலையோரம் விற்பனைக்கு வைத்திருந்த விநாயகர் சிலைகளை போலீஸார் பறிமுதல் செய்து, காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதால் சிலைகளை திரும்ப ஒப்படைத்தனர்.

விநாயகர் சதுர்த்தி விழாநாளை (10-ம் தேதி) கொண்டாடப்படுகிறது. கரோனா பரவலை கட்டுப்படுத்த பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபடவும், ஊர்வலமாகச் சென்று நீர்நிலைகளில் கரைக்கவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. வீடுகளில் விநாயகர் சிலைகளை வைத்துவழிபட்டு, நீர்நிலைகளில் கரைக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், தென்காசி மாவட்டம் புளியங்குடியில் சாலைஓரத்தில் மத்தியப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் விநாயகர் சிலைகளை விற்பனை செய்துகொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக ரோந்து சென்ற புளியங்குடி போலீஸார், சிலைகளை பறிமுதல் செய்து காவல்துறை வாகனத்தில் ஏற்றினர்.

இதைப் பார்த்தவர்கள், “சிலைகளை விற்பனைக்குத்தானே வைத்திருக்கிறார், அவற்றை ஏன் பறிமுதல் செய்கிறீர்கள்” எனக் கேட்டனர். அதற்கு பதிலளித்த போலீஸார், “இதுதொடர்பாக காவல் ஆய்வாளரிடம் கேளுங்கள். காவல் நிலையத்தில்தான் அவர் இருக்கிறார்” என்று பதிலளித்துள்ளனர்.

விநாயகர் சிலைகளை போலீஸார் பறிமுதல் செய்து எடுத்துச் சென்றதை அங்கு இருந்தவர்கள் வீடியோவில் பதிவுசெய்து, சமூக வலைதளங்களில் பரப்பினர். போலீஸாரின் இந்த செயல் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதுகுறித்து ஆய்வாளர் ராஜாராமிடம் கேட்டபோது, “சிலைகளை அளவு பார்ப்பதற்காக போலீஸார் எடுத்து வந்துள்ளனர். அவை உரிமையாளரிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டுவிட்டன” என்றார்.

SCROLL FOR NEXT