நாடு முழுவதும் இரண்டாம் தவணை போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று நடக்கிறது. தமிழகத்தில் உள்ள 5 வயதுக்குட்பட்ட 70.65 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்குவதற் காக 43,051 மையங்கள் ஏற்படுத் தப்பட்டுள்ளன.
இந்தியாவில் போலியோ நோயை (இளம்பிள்ளை வாதம்) ஒழிப்பதற்காக ஆண்டுதோறும் 2 தவணைகளில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான முதல் தவணை போலியோ சொட்டு மருந்து முகாம் நாடு முழுவதும் கடந்த ஜனவரி மாதம் 17-ம் தேதி நடந்தது.
தமிழகத்தில் நடந்த முகாம்களில் 5 வயதுக்குட்பட்ட 70.65 லட்சம் குழந்தைகளில் 67.17 லட்சம் குழந் தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. விடுபட்ட குழந்தைகளுக்கு ஒரு வாரத்தில் சுகாதாரத்துறை பணியாளர்கள் வீடுவீடாக சென்று சொட்டு மருந்து வழங்கினர்.
இந்நிலையில் இரண்டாம் தவணை போலியோ சொட்டு மருந்து முகாம் நாடு முழுவதும் இன்று (பிப். 21) நடக்கிறது. தமிழகத்தில் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன் வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்கள் என 43,051 சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
பயணத்தில் இருக்கும் குழந்தை களுக்காக முக்கிய பேருந்து, ரயில், விமான நிலையங்கள், செக் போஸ்ட்கள், சுங்கச் சாவடிகளில் 1,652 நகரும் மையங்கள் அமைக் கப்பட்டிருக்கின்றன. மேலும் தொலைதூரம் மற்றும் எளிதில் செல்ல முடியாத பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்காக 1,000 நடமாடும் குழுக்கள் மற்றும் 3 ஆயிரம் வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. சொட்டு மருந்து வழங்கும் பணியில் சுகா தாரப் பணியாளர்கள், அங்கன் வாடிப் பணியாளர்கள், ஆசிரியர் கள், தன்னார்வலர்கள் என 2 லட்சத் துக்கும் மேற்பட்டோர் ஈடுபடுத்தப் படுகின்றனர்.
இதுதொடர்பாக சுகாதாரத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் இரண்டாம் தவணை போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று நடக்கிறது. போலியோ சொட்டு மருந்து மையம் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும். தேசிய தடுப்பூசி அட்டவணைப்படி ஓரிரு நாட்களுக்கு முன்பு குழந் தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட்டிருந்தாலும், முகாம் நடைபெறும் நாட்களில் மீண்டும் சொட்டு மருந்து கொடுக்க வேண் டும். புதிதாக பிறந்த குழந்தைகள் முதல் 5 வயதுக்குட்பட்ட குழந்தை களுக்கு போலியோ சொட்டு மருந்து அவசியம் கொடுக்க வேண்டும்.
விடுபட்ட குழந்தைகளை கண்டுபிடிப்பதற்காக, போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்ட குழந்தைகளின் இடது கை சுண்டு விரலில் மை வைக்கப்படும். இடம் பெயர்ந்து வாழும் தொழி லாளர்களின் குழந்தைகளுக்கும் முகாம் நாளில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும்.
இவ்வாறு அவர் தெரி வித்துள்ளார்.