பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரைவார்க்கும் மத்திய அரசின் முடிவை கண்டித்து, எஸ்ஆர்எம்யு தொழிற்சங்கத்தினர் தாம்பரம் ரயில் நிலையம் முன்பாக நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். படம்: எம்.முத்துகணேஷ் 
தமிழகம்

ரயில்வே உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களின் ரூ.6 லட்சம் கோடி சொத்துகளை தனியாருக்கு குத்தகைக்கு விடுவதை கைவிட வேண்டும்: எஸ்ஆர்எம்யு பொதுச் செயலர் என்.கண்ணையா வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

ரயில்வே துறையை தனியார் மயமாக்குவதைக் கண்டித்து தெற்கு ரயில்வே ஊழியர் சங்கம் (எஸ்ஆர்எம்யு) சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்களில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தியது.

இதுகுறித்து எஸ்ஆர்எம்யு பொது செயலர் என்.கண்ணையா சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பல ஆண்டுகளாக நாட்டின் சொத்தாக இருக்கும் பொதுத்துறை நிறுவனங்களின் பங்கை தனியாருக்கு விற்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. சுமார் ரூ.6 லட்சம் கோடி மதிப்பிலான சொத்துகளை தனியாருக்கு குத்தகைக்குவிட முடிவு செய்துள்ளது.

பல்வேறு நாடுகளில் ரயில்கள் இயக்கத்தில் தனியார்மயமாக்கல் தோல்வியில் முடிந்து, பிறகு மீண்டும் அவை தேசியமயமாக்கப்பட்டன. இதை மத்திய அரசு புரிந்துகொள்ள வேண்டும். எனவே, ரயில்வே உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களின் சொத்துகளை தனியாருக்கு குத்தகைக்கு விடுவதை மத்திய அரசு கைவிட வேண்டும் என்றார். எஸ்ஆர்எம்யு தலைவர் சி.ஏ.ராஜாதர், துணைப் பொதுச் செயலர் ஈஸ்வர்லால் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

SCROLL FOR NEXT