தமிழகம்

அடையாற்றின் கரையில் ரூ.10 கோடியில் பசுமை போர்வை: சென்னை மாநகராட்சி நடவடிக்கை

செய்திப்பிரிவு

சென்னையில் அடையாற்றின் கரையோரம் ரூ.10.60 கோடியில் பசுமை போர்வையை ஏற்படுத்த மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.

சென்னை மாநகரப் பகுதியில் வெள்ள பாதிப்பை குறைக்கும் முக்கிய பணியை அடையாறு மேற்கொண்டு வருகிறது. இது சென்னை மாநகரப் பகுதியில் சுமார் 24 கிமீ நீளத்தில் பாய்கிறது.

இந்த ஆற்றை சீரமைக்கும் பணிகள் கடந்த 2018-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆற்றில் தூர் வாருதல், தடுப்பு சுவர் ஏற்படுத்துதல் போன்ற பணிகளை பொதுப்பணித் துறையும், ஆற்றுக்கு வரும் கழிவுநீரை தடுத்து சுத்திகரிக்கும் பணியில் சென்னை குடிநீர் வாரியமும், திடக்கழிவுகளை அகற்றுதல், ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள 3 பாலங்களை அழகுபடுத்துதல், 5 இடங்\களில் சமுதாய கழிவறைகளை ஏற்படுத்துதல், 5 இடங்களில் வாகன நிறுத்துமிடங்களை உருவாக்குதல் மற்றும் மரக்கன்றுகளை நட்டு பராமரித்தல் போன்ற பணிகளை மாநகராட்சி நிர்வாகமும் மேற்கொண்டு வருகின்றன.

தமிழகம் முழுவதும் பசுமை போர்வை பரப்பை 33 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ள நிலையில், மாநகரப் பகுதியில் தினமும் பல்வேறு இடங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டு வருகின்றன.

அதன் தொடர்ச்சியாக அடையாற்றின் கரையோரங்களில் சைதாப்பேட்டை திரு.வி.க.பாலம் முதல், கோட்டூர்புரம் பாலம் வரை உள்ள 2.4 கிமீ நீள ஆற்றின் இரு கரைகளிலும் ரூ.10 கோடியே 60 லட்சம் செலவில் மரக்கன்றுகளை நட மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

இப்பகுதியில் உள்நாட்டு வகை மரங்களை நட்டு பசுமை போர்வையை அதிகரிக்க இருப்பதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT