தமிழகம்

சென்னை மழை வெள்ள பாதிப்பு: மத்திய அரசின் குற்றச்சாட்டுக்கு அதிமுக அரசு என்ன பதில் சொல்லப் போகிறது?- ஸ்டாலின் கேள்வி

செய்திப்பிரிவு

சென்னை மழை வெள்ளம் குறித்த தமிழக அரசின் பொய்யினை மத்திய அரசின் அறிக்கை தகர்த்து விட்டது என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பேஸ்புக்கில் இன்று பதிவுட்டுள்ளதாவது:

திடீர் கனமழை தான் சென்னையில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புக்கு காரணம் என்று அதிமுக அரசு பச்சை பொய் சொல்கிறது என நான் திரும்ப திரும்ப கூறி வந்திருக்கிறேன். இதை உறுதி செய்யும் விதத்தில் இப்போது மத்திய அரசு அறிக்கை வெளி வந்துள்ளது.

அதில் கன மழை பெய்யும் என்று 48 மணி நேரத்திற்கு முன்பே தமிழக அரசுக்கு எச்சரிக்கை செய்தும் மாநில அரசு எந்த முன் எச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதுதான் வெள்ள பாதிப்புக்கு காரணம் என்று வெளிப்படையாக குற்றம் சாட்டியிருக்கிறது மத்திய அரசு. தமிழக அரசின் பொய்யினை இந்த அறிக்கை தகர்த்து விட்டது.

இது இயற்கை பேரழிவு அல்ல என்ற உண்மையும் இப்போது வெளி வந்து விட்டது. அதிமுக அரசு உருவாக்கிய செயற்கை பேரிடர் இந்த மழை வெள்ள பாதிப்பு என்று திமுக கூறி வந்தது தற்போது நிரூபிக்கப்பட்டு விட்டது. கழகம் சொன்னதை இப்போது மத்திய அரசே உண்மை என்று உறுதி செய்ததற்காக மகிழ்ச்சி அடைகிறேன். மத்திய அரசின் இந்த அறிக்கைக்கும் தன் தோல்விக்கும் அதிமுக அரசு என்ன பதில் சொல்லப் போகிறது?

உரிய கால அவகாசம் கிடைத்தும் முன் அறிவிப்பு இன்றி செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீரை அதிமுக அரசு திறந்து விட்டதால் ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்க்கை நாசமானது. இதற்கு அதிமுக அரசே முழு பொறுப்பு. ஆகவே உண்மையை மக்களுக்கு அறிவிக்க உடனடியாக நீதி விசாரணைக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு ஸ்டாலின் தனது பதிவில் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT