தமிழகம்

மாதம் 2.50 லட்சம் பட்டா விண்ணப்பங்களுக்குத் தீர்வு காணப்படும்: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

கி.மகாராஜன்

தமிழகத்தில் மாதந்தோறும் 2.5 லட்சம் பட்டா விண்ணப்பங்களுக்குத் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என உயர் நீதிமன்றத்தில் நில அளவை ஆணையர் தெரிவித்தார்.

மதுரை, புதுக்கோட்டை உட்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆண்டியப்பன் உட்பட 15 பேர் தங்களுக்குச் சொந்தமான இடங்களுக்கு பட்டா கேட்டு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்களை நீதிபதி கிருஷ்ணகுமார் விசாரித்து, உட்பிரிவு செய்தும், உட்பிரிவு செய்யாமலும் பட்டா கேட்டு அளிக்கப்பட்ட விண்ணப்பங்கள் நிலுவையில் இருப்பது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய நில அளவை ஆணையருக்கு உத்தரவிட்டார்.

இந்த வழக்கு நீதிபதி டி.கிருஷ்ணகுமார் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சென்னை நில அளவை ஆணையர் அறிக்கை தாக்கல் செய்தார்.

அதில், ''1.10.2020 முதல் 31.3.2021 வரை பட்டா கேட்டு 8,81,269 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில் 8,62,787 விண்ணப்பங்களுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது. 98 சதவீத விண்ணப்பப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு பட்டா வழங்கப்பட்டுள்ளது. பட்டா விண்ணப்பங்கள் மீது தாமதம் இல்லாமல் முடிவெடுக்கக் கூடுதல் நில அளவையர்கள் நியமனம் உட்பட கடந்த 6 மாதங்களாகப் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

1.4.2021 வரை 5.95 லட்சம் பட்டா விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன. மாதந்தோறும் 1.5 லட்சம் விண்ணப்பங்களுக்குத் தீர்வு காணும் வகையில் நில அளவைத்துறையில் பணியாளர்கள் உள்ளனர். நிலுவையில் உள்ள பட்டா விண்ணப்பங்கள் மீது 6 மாதத்தில் நடவடிக்கை எடுக்கப்படும். மாதம் 2.50 லட்சம் பட்டா விண்ணப்பங்களுக்குத் தீர்வு காணப்படும்.

பட்டா வழங்குவதில் தற்போது கடைப்பிடிக்கப்படும் நவீன முறையால் கிராம நிர்வாக அலுவலரின் வேலைப்பளு குறைந்துள்ளது. பட்டா பணிக்குக் கூடுதலாக நூறு உரிமம் பெற்ற நில அளவையர்களை ஈடுபடுத்த ரூ.2.32 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது அமலுக்கு வந்தால் கூடுதலாக மாதம் 10 ஆயிரம் பட்டா விண்ணப்பங்களுக்குத் தீர்வு காண முடியும். டிஎன்பிஎஸ்சி வழியாக 440 நில அளவையர் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. இவர்கள் நவம்பர் மாதத்திலிருந்து பணியில் ஈடுபடுத்தப்படுவர்'' என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

பின்னர், ''நில அளவை ஆணையரின் பதில் மனு ஏற்கப்படுகிறது. 3 வாரத்தில் நில நிர்வாக ஆணையர் பதில் மனுத் தாக்கல் செய்ய வேண்டும். 2021 ஜூலை மாதம் முடிய பட்டா விண்ணப்பங்கள் நிலுவை, தீர்வு காணப்பட்ட விண்ணப்பங்களின் விவரங்களைத் தாக்கல் செய்ய வேண்டும்'' என நீதிபதி உத்தரவிட்டார். பின்னர் விசாரணை 13-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

SCROLL FOR NEXT