திருச்சி சிறுகனூரில் பெரியாருக்கு சிலை வைக்க அளித்த அனுமதியை அரசு ரத்து செய்ய வேண்டும் என்று இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாகத் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மனு அளித்த அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது:
’’தமிழ்நாட்டில் பெரும்பான்மையான மக்கள் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள். இந்துக் கடவுள்களை இழிவுபடுத்தி, மக்களின் இந்து தெய்வ நம்பிக்கைகளைப் புண்படுத்தி பிரச்சாரம் செய்ததுடன், உருவ வழிபாட்டை எதிர்த்தவர் பெரியார். எனவே, அவருக்கு திருச்சி சிறுகனூரில் சிலை வைப்பதை இந்து மக்கள் கட்சி எதிர்க்கிறது. சிலை வைக்க அளித்த அனுமதியை அரசு திரும்பப் பெற வேண்டும்.
இதேபோல், பிரதமர் மோடியின் பிறந்த நாளான செப்.17-ம் தேதியின் மாட்சியைக் குறைக்கும் வகையில், வேண்டுமென்றே சமூக நீதி நாளாகக் கடைப்பிடித்து, உறுதிமொழி ஏற்க வேண்டும் என்று சட்டப்பேரவையில் 110-விதியின் கீழ் முதல்வர் அறிவித்ததையும் திரும்பப் பெற வேண்டும்.
ஜாதி வாரி சலுகை வேண்டும் என்றும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் வேண்டும் என்றும் கேட்ட பெரியாருக்கும், சமூக நீதிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. எனவே, அவரின் பிறந்த நாளை சமூக நீதி நாளாகக் கடைப்பிடித்து உறுதிமொழி ஏற்க வேண்டும் என்ற உத்தரவையும் அரசு திரும்பப் பெற வேண்டும்.
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி மற்றும் அவரது மகன் அன்பு ஆகியோரின் கட்டுப்பாட்டில் உள்ள திராவிடர் கழகம், பெரியார் மணியம்மை அறக்கட்டளை ஆகியவற்றில் ஏராளமான ஊழல் உள்ளது. எனவே, அவற்றை அரசுடைமை ஆக்க வேண்டும்’’.
இவ்வாறு அர்ஜூன் சம்பத் தெரிவித்தார். அப்போது இந்து மக்கள் கட்சியின் திருச்சி மாவட்ட நிர்வாகிகள் சந்துரு, மாரி, ஸ்ரீராம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.