பழநி மலைக்கோயிலுக்கு பக்தர்கள் செல்லும் ரோப்கார் சேவை நீண்ட இடைவெளிக்குப் பிறகு இன்று முதல் தொடங்கியது. இதனால் பக்தர்கள் மூன்று நிமிடத்தில் மலைக்கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்ய முடியும்.
திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக் கோயிலுக்குச் செல்ல படிப்பாதை, யானைப்பாதை, மின் இழுவை ரயில், ரோப்கார் ஆகியவை உள்ளன. கரோனா தொற்றுப் பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்த நிலையில் இரண்டாம் அலையின்போது கோயில் மூடப்பட்டிருந்தது. மீண்டும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு கோயில் திறக்கப்பட்ட நிலையில், படிப்பாதை, யானைப்பாதை வழியாக மட்டும் பக்தர்கள் கோயிலுக்கு அனுமதிக்கப்பட்டனர். எனினும் குழந்தைகள், முதியோர் அனுமதிக்கப்படவில்லை.
இதையடுத்து மின் இழுவை ரயில் இரண்டு மாதங்களுக்கு முன்பு இயக்கப்பட்டது. இருந்தபோதிலும் ரோப்காரை இயக்கினால் மலைக்கோயிலில் பக்தர்கள் அதிகளவில் கூட நேரிடும் என்பதால் ரோப் காரைஇயக்குவது தாமதமாகி வந்தது. இந்நிலையில் சில தினங்களாக ரோப்கார் பராமரிப்புப் பணிகள் முடிந்து சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இதையடுத்து இன்று காலை முதல் மலைக்கோயிலுக்கு ரோப்கார் மூலம் பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
இதனால் பக்தர்கள் நீண்டநேரம் காத்திருந்து மின்இழுவை ரயிலில் பயணித்த நிலை தற்போது இல்லை. நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரோப்கார் இயக்கப்பட்டதால் வயதானவர்கள், குழந்தைகள் எளிதில் மலைக்கோயில் செல்லமுடியும் என்பதால் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.