தமிழகம்

சட்டப்பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு; தமிழக அரசு மீது எடப்பாடி பழனிசாமி சரமாரி புகார்

செய்திப்பிரிவு

அதிமுக அரசுக் கொண்டு வந்த எந்த திட்டத்தையும் திமுக அரசு அனுமதிக்கவில்லை என்று கூறி சட்டப் பேரவையில் இருந்து அதிமுக இன்று வெளிநடப்பு செய்தது.

தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரில் பல்வேறு துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் இன்று சட்டப்பேரவையில், கடந்த அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங்கள் எல்லாம் முடக்கப்பட்டிருப்பதாக புகார் கூறியதுடன், அதுகுறித்து பேச அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறி அதிமுக எம்எல்ஏக்கள் அவை தொடங்கிய சிறிது நேரத்திலேயே வெளிநடப்பு செய்தனர்.

பின்னர் இதுகுறித்து சட்டப் பேரவை எதிர்க் கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் பேசியதாவது:

அதிமுக அரசு கொண்டுவந்த அனைத்து திட்டங்களையும் திமுக அரசு புறக்கணிக்கிறது. அதிமுக அரசுக் கொண்டு வந்த எந்த திட்டத்தையும் அதிமுக அரசு அனுமதிக்கவில்லை.

இது தொடர்பான எங்களது கோரிக்கைகளையும் திமுக அரசு பரிசீலிக்கவில்லை. தாலிக்கு தங்கம் திட்டத்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து அத்திட்டத்தை திமுக அரசு சீரழித்துள்ளது.

இவை எல்லாவற்றையும் வலியுறுத்திதான் சட்டப் பேரவையில் பேசுவதற்கு வாய்ப்பு கேட்டோம். ஆனால் எங்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டு பாதியிலேயே பறிக்கப்பட்டது. நாங்கள் பேசியது அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்பட்டு விட்டது. இதனைக் கண்டித்து தற்போது வெளி நடப்பு செய்கிறோம்” என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT