தமிழகம்

பத்திரிகையாளர் நல வாரியம் அமைப்பு; கட்டபொம்மன், மருது சகோதரர்கள், தாகூர், கலாம், நாவலருக்கு சிலை: சட்டப்பேரவையில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அறிவிப்பு

செய்திப்பிரிவு

வீரபாண்டிய கட்டபொம்மன், மருது சகோதரர்கள், தாகூர், அப்துல் கலாம், நாவலர் நெடுஞ்செழியன் உள்ளிட்ட தலைவர் களுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சிலை நிறுவப்படும், பத்திரிகையாளர் நல வாரியம் அமைக்கப்படும் என்று செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் செய்தித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நேற்று நடந்தது. இதற்குபதில் அளித்து அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வெளியிட்ட அறிவிப்பு கள் வருமாறு:

சுதந்திரப் போராட்டத் தலைவர்கள், தியாகிகள் உள்ளிட்டோருக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில்ரூ.1 கோடியில் சிலைகள் நிறுவப்படும். அந்த வகையில், சென்னை கிண்டி காந்தி மண்டபத்தில் வீரபாண்டிய கட்டபொம்மன், மருதுசகோதரர்கள், கடலூரில் சுதந்திரப்போராட்ட வீராங்கனை அஞ்சலை அம்மாள், கீழ்பழுவூரில் தியாகிசின்னசாமி, அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் முன்னாள் குடி யரசுத் தலைவர் அப்துல் கலாம், சென்னை ராணி மேரி கல்லூரியில் வங்கக்கவி ரவீந்திரநாத் தாகூர், சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகையில் நாவலர் இரா.நெடுஞ்செழியன், மயிலாடுதுறையில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார், புதுக்கோட்டையில், முத்துலெட்சுமி ரெட்டி, ராணிப்பேட்டையில் தமிழ் அறிஞர் மு.வரதராசனார் ஆகியோருக்கு சிலைகள் அமைக் கப்படும்.

75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, பாஞ்சாலங்குறிச்சியில் கட்டபொம்மன் கோட்டைமேம்படுத்தப் படும். சென்னை காந்தி மண்டப வளாகத்தில், காந்தி மண்டபம், அருங்காட்சியகம், காமராஜர், பக்தவத்சலம், ராஜாஜி நினைவு மண்டபங்கள் ரூ.3.38 கோடியில்மேம்படுத்தப்படும். சுதந்திரப் போராட்ட வீரர் தளி பாளையக்காரர்மலையாண்டி வெங்கிடுபதி எத்தலப்பர் நாயக்கருக்கு திருப்பூரில்ரூ.2.60 கோடியில் சிலை, அரங்கம் அமைக்கப்படும்.

பொள்ளாச்சியில் நீர்வளத் துறைதலைமை பொறியாளர் வளாகத்துக்கு முன்னாள் மத்திய அமைச்சர்சி.சுப்பிரமணியம் பெயர் சூட்டப்படும். இந்த வளாகத்தில் கட்டப்படும்புதிய அரங்குக்கு சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் வி.கே.பழனிசாமி பெயர், மேல் தள அரங்குக்கு பொள்ளாச்சி நா.மகாலிங்கம் பெயர் சூட்டப்படும். அங்கு அவர்களது சிலைகளும் நிறுவப்படும். பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தை முன்னாள் பிரதமர் நேரு தொடங்கிவைத்த அக்.7-ம் தேதியை ‘பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்ட நாள்’ என்று அறிவித்து, அரசு சார்பில் அவர்களது சிலைகளுக்கு மாலை அணிவிக்கப்படும்.

முன்னாள் முதல்வர் ப.சுப்பராயனுக்கு சென்னையில் சிலை, நாமக்கல்லில் அரங்கம், கீழ்பவானி பாசன திட்டம் உருவாக காரணமாக இருந்த தியாகி ஈஸ்வரனுக்கு ஈரோட்டில் சிலை, அரங்கம், முன்னாள் அமைச்சர் ஏ.கோவிந்தசாமிக்கு விழுப்புரத்தில் சிலை, அரங்கம் ஆகியவை தலா ரூ.2.60 கோடியில் அமைக்கப் படும்.

பத்திரிகையாளர்களின் நலன்காக்கும் வகையில் பத்திரிகையாளர் நல வாரியம் அமைக்கப்படும். பணிக் காலத்தில் இயற்கை எய்தும் பத்திரிகையாளர்களுக்கு முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் குடும்ப நல நிதி ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்படும். மாவட்ட, மாநில அளவில் பத்திரிகையாளர்கள் துறை சார்ந்த தொழில் தகுதியைஉயர்த்திக்கொள்ள பயிற்சி வழங் கப்படும்.

இளம் பத்திரிகையாளர்களில் ஆர்வம் உள்ள, தகுதியானவர்களை தேர்வு செய்து, இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மாஸ் கம்யூனிகேஷன்ஸ், ஏசியன் காலேஜ் ஆஃப் ஜர்னலிசம் போன்ற பத்திரிகை சார்ந்த கல்வி நிறுவனங்களில் உயர்கல்வி படிக்கவும், பயிற்சி பெறவும் நிதியுதவி வழங்கப்படும்.

சிறந்த இதழியலாளருக்கு ஆண்டுதோறும் ‘கலைஞர் எழுதுகோல் விருது’ மற்றும் ரூ.5 லட்சம் பரிசுத் தொகையுடன் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும்.

அரசின் செயல்பாடுகள், திட்டங்களை பொதுமக்கள் அறிந்து பயன்பெறும் வகையில் சமூக ஊடகப் பிரிவு உருவாக்கப்படும் என்பன உள்ளிட்ட 20 அறிவிப்புகளை அமைச்சர் வெளியிட்டார்.

துரைமுருகன் வரவேற்பு

நாவலர் நெடுஞ்செழியனுக்கு சிலை அமைக்கப்படும் என்பதை வரவேற்றுப் பேசிய அவை முன்னவர் துரைமுருகன், ‘‘அறிஞர் அண்ணாவால் ‘நடமாடும் பல்கலைக்கழகம்’ என்று அழைக்கப்பட்டவர் நாவலர் நெடுஞ்செழியன். அவர் திமுகவில் இருந்து பிரிந்து சென்றாலும், அவர் மீது மரியாதை உண்டு.கடந்த முறை எதிர்க்கட்சியாக இருந்தபோது, ஆட்சியில் இருந்தவர்களிடம் நெடுஞ்செழியனுக்கு சிலை அமைக்குமாறு கோரினேன். செய்வதாகக் கூறினர். ஆனால், செய்யவில்லை. தற்போது அறிவிக் கப்பட்டுள்ளதை வரவேற்கிறேன்’’ என்றார்.

SCROLL FOR NEXT