டெல்டா மாவட்டங்களில் கடந்த பிப்.21-ம் தேதி அப்போதைய முதல்வர் பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அப்போதைய சட்டம் - ஒழுங்கு சிறப்பு டிஜிபி, ஆலோசனை என்ற பெயரில் பெண் ஐபிஎஸ் அதிகாரி ஒருவருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகார் எழுந்தது.
அதைத் தொடர்ந்து, சிறப்பு டிஜிபியின் உத்தரவின்படி அந்தப் பெண் ஐபிஎஸ் அதிகாரியை மிரட்டியதாக செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் எஸ்பி மீதும் புகார் எழுந்தது.
இருவர் மீதும் சிபிசிஐடி போலீஸார் வழக்குப்பதிவு செய்து, விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கு விசாரணை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆக.9 முதல் நடக்கிறது.
இந்நிலையில் நேற்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது சிறப்பு டிஜிபி, செங்கல்பட்டு முன்னாள் எஸ்பி ஆகியோர் நேரில் ஆஜராயினர். இரு தரப்பினரின் வழக்கறிஞர்களும் வாதிட்டனர். இதைத் தொடர்ந்து இவ்வழக்கை வருகிற 14-ம் தேதிக்கு குற்றவியல் நடுவர் கோபிநாதன் தள்ளிவைத்து உத்தரவிட்டார். வழக்கு விசாரணைக்கு வந்த இருவரும் தனித்தனியே வந்து, தனித்தனியே புறப்பட்டுச் சென்றனர்.