சென்னை மாநகராட்சி தூய்மைப் பணிகளுக்காக ரூ.36.52 கோடி மதிப்பிலான பேட்டரியால் இயங்கும் மூன்றுசக்கர வாகனங்கள், காம்பாக்டர் இயந்திரங்களை நேற்று கொடியசைத்து தொடங்கிவைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். அருகில், அமைச்சர்கள் கே.என்.நேரு, க.பொன்முடி, மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டோர். படம்: ம.பிரபு 
தமிழகம்

`சிங்காரச் சென்னை 2.0' பல்வேறு புதிய திட்டங்கள் தீட்டப்படுகின்றன: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

செய்திப்பிரிவு

நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை மற்றும் சென்னை மாநகராட்சி சார்பில் `சிங்காரச் சென்னை 2.0' தூய்மைப் பணிகளுக்காக ரூ.36.52 கோடியில், பேட்டரியால் இயங்கும் 1,684 மூன்றுசக்கர வாகனங்கள், 15 காம்பாக்டர் இயந்திரங்களைத் தொடங்கிவைத்தல் மற்றும் கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி சென்னை ரிப்பன் மாளிகையில் நேற்று நடைபெற்றது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், அமைச்சர்கள் கே.என்.நேரு, க.பொன்முடி, மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதில், தூய்மைப் பணிகளுக்கான வாகனங்களின் சேவையை கொடியசைத்து தொடங்கிவைத்த முதல்வர், கரோனா தடுப்பு பணியின்போது உயிரிழந்தோரின் வாரிசுதாரர்கள் 195 பேருக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணையை வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:

1996-ல் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் என்னை மேயராகத் தேர்வு செய்து, மக்கள் பணியாற்ற சென்னைவாசிகள் எனக்கு உத்தரவிட்டனர். அதுவரை, மேயர் என்றால் பெரிய அங்கி, 100 பவுன் சங்கிலி அணிந்து, பெரிய காரில் நிகழ்ச்சிகளுக்கு செல்பவர்கள் என்பதை மாற்றி, மக்கள் பணியாற்றுவதுதான் மேயரின் வேலை என்பதை அனைவருக்கும் உணரவைத்தேன்.

மேயர் பொறுப்பேற்கும் நிகழ்ச்சியை ரிப்பன் மாளிகையில் நடத்தினோம். அதற்கான அழைப்பிதழை முன்னாள் முதல்வர் கருணாநிதியிடம் கொடுத்தேன். அதன் முதல் பக்கத்தில் கருணாநிதி எனக்கு பொன்னாடை அணிவிப்பதுபோன்ற படமும், கடைசி பக்கத்தில் ரிப்பன் மாளிகையின் படமும் இடம்பெற்றிருந்தது. அதை அவர் பார்த்துக்கொண்டே இருந்தார்.

1996 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வென்று ஆட்சி அமைத்தபோது, என்னை அமைச்சராக்க வேண்டுமெ கட்சி நிர்வாகிகள் அனைவருமே கருணாநிதியிடம் கேட்டுக்கொண்டார்கள். ஆனால் அவர் என்னை அமைச்சராக்கவில்லை. நானும் அதை விரும்பவில்லை.

பின்னர் நடந்த உள்ளாட்சித் தேர்தலில், மக்கள் வாக்குகளைப் பெற்று தேர்வான முதல் மேயராக நான் பொறுப்பேற்றேன். அந்தவகையில், அழைப்பிதழில் ரிப்பன் மாளிகை படத்தைப் பார்த்து கொண்டிருந்த கருணாநிதி, ‘எல்லாரும் சேர்ந்து செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் ஒரு சிறிய அறையில் உன்னை உட்கார வைக்கப் பார்த்தார்கள். நான் இவ்வளவு பெரிய கட்டிடத்தில் உன்னை உட்கார வைத்திருக்கிறேன்’ என்று பெருமையுடன் கூறினார். அவ்வளவு சிறப்புமிக்க கட்டிடம்தான் இந்த ரிப்பன் மாளிகை.

நான் மேயராகப் பொறுப்பேற்றபோது, சென்னையை சிங்காரத் சென்னையாக மாற்ற வேண்டுமென்று பணியாற்றினேன். தற்போது `சிங்காரச் சென்னை 2.0' என்ற வகையில் புதிய திட்டங்கள் தீட்டப்பட்டு வருகின்றன.

டெல்லி, மும்பை, கொல்கத்தா என்ற பெருநகரங்களுக்கு அடுத்தபடியாக சென்னை உள்ளது. எனவே, சென்னைக்குப் பெருமை சேர்க்கக்கூடிய வகையில் பணியாற்றவேண்டும் என்று அமைச்சர்கள், எம்.பி., எம்எல்ஏ-க்கள், அதிகாரிகளைக் கேட்டுக்கொள்கிறேன்.

ஏற்கெனவே சட்டப்பேரவையில் நகர்ப்புற வளர்ச்சித் துறை மீதான மானியக் கோரிக்கையின்போது அமைச்சர் கே.என்.நேரு, சென்னை மக்களுக்காக பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அவற்றை உடனடியாக நிறைவேற்றும் முயற்சியில் நீங்கள் ஈடுபடவேண்டும்.

இவ்வாறு முதல்வர் கூறினார்.

SCROLL FOR NEXT