போதையில் நண்பரை பாட்டிலால் குத்திய வழக்கில் கைதான இளைஞர்களுக்கு இனிமேல் குடிக்க மாட்டோம் என பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தால் ஜாமீன் வழங்குவதாக உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது.
திருச்சியைச் சேர்ந்தவர்கள் சிவா, கார்த்திக். நண்பரை மது பாட்டிலால் குத்திய வழக்கில் இவர்களை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் ஜாமீன் கோரி இருவரும் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்தனர்.
அதில், ''நண்பர்கள் சுரேஷ், பாண்டியன் ஆகியோருடன் சேர்ந்து மது அருந்தினோம். அப்போது எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் பீர் பாட்டிலால் சுரேஷைக் குத்தியதாக எங்களை போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கு பொய் வழக்கு. எண்ணிக்கைக்காக எங்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். எனவே, ஜாமீன் வழங்க வேண்டும்''.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதி பி.புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது.
பின்னர், ''மது அருந்தியதுதான் பிரச்சினைக்குக் காரணமாகும். மனுதாரர்கள் இருவரும் இனிமேல் மது குடிக்கமாட்டோம் என பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தால் ஜாமீன் வழங்கப் பரிசீலிக்கப்படும்'' என்று கூறி விசாரணையை செப். 13-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.