கன்னியாகுமரி மாவட்டத்தில் மலையோர பகுதிகளில் நீடித்து வரும் மழையால் பேச்சிப்பாறை அணை வெள்ளஅபாய கட்டத்தை எட்டியது. அணையில் இருந்து விநாடிக்கு1968 கனஅடி தண்ணீர் வெளியேறி வருவதால் திற்பரப்பு, மற்றும் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் ஆர்ப்பரிக்கிறது.
குமரி மாவட்டத்தில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக விட்டு விட்டு சாரல் மழை பொழிந்து வருகிறது. அணை, மற்றும் மலையோர பகுதிகளில் நீடிக்கும் மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இதனால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைகளை பொதுப்பணித்துறை நீர்ஆதார பொறியாளர் குழுவினர் 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர். அதிகபட்சமாக சிவலோகத்தில் 13 மிமீ., மழை பெய்திருந்தது.
பெருஞ்சாணி, புத்தன் அணைகளில் தலா 5 மிமீ., பாலமோரில் 4 மிமீ., மழை பெய்திருந்தது. தொடர் மழையால் பேச்சிப்பாறை அணை 45 அடியை எட்டி வெள்ளஅபாய நிலையில் இருந்தது. அணைக்கு விநாடிக்கு 790 கனஅடி தண்ணீர் வந்ததால் அணையில் இருந்து உபரியாக 1536 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.
ஏற்கெனவே பாசனத்திற்காக திறந்துவிடப்பட்ட 432 கனஅடி தண்ணீருடன் உபநீரும் சென்றதால் விநாடிக்கு 1968 கனஅடி தண்ணீர் பேச்சிப்பாறையில் இருந்து வெளியேறியது. பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 62.67 அடியாக உள்ள நிலையில் அணைக்கு உள்வரத்தாக 224 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 300 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
இதைப்போல் சிற்றாறு ஒன்று அணையின் நீர்மட்டம் 16.73 அடியாக உள்ள நிலையில் அணைக்கு உள்வரத்தாக 183 கனஅடி தண்ணீர் உள்வரத்தாக வருகிறது. அணையில் இருந்து 200 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
அணைகளில் இருந்து வெளியேறும் தண்ணீரால் திற்பரப்பு அருவி ஆர்ப்பரித்து கொட்டுகிறது. அருவி பூங்கா எல்லை வரை தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. இதை தூரத்தில் நின்று பார்ப்பதற்கே அபாயகரமாக உள்ளது.
தற்போது ஊரடங்கால் அருவிகளில் குளிப்பதற்கு ஏற்கெனவே தடை என்பதால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏதும் இல்லை. இதைப்போல் குழித்துறை தாமிரபரணி ஆற்றிலும் தண்ணீர் கரையை தொட்டவாறு தண்ணீர் ஓடுகிறது. அணைகள் நிரம்பியுள்ள நிலையில் தொடர்ந்து கனமழை பெய்தால் அணைகள் அனைத்திலும் இருந்து அதிக கனஅடி தண்ணீர் திறந்துவிடுவதற்கு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.