நாடகத் தந்தை சங்கரதாஸ் சுவாமிகளின் பிறந்த நாளையும் அரசு விழாவாகக் கொண்டாடப் புதுவை அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் சிவா வலியுறுத்தியுள்ளார்.
நாடகத் தந்தை சங்கரதாஸ் சுவாமிகளின் 154ஆவது பிறந்த நாள் விழா கருவடிக்குப்பம் இடுகாட்டில் உள்ள அவரது சிலையுள்ள சமாதி முன்பு இன்று நடந்தது. புதுச்சேரி வரலாற்றுப் பேரவை, இராதே அறக்கட்டளை சார்பில் நடந்த இந்நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் சிவா பங்கேற்று, சங்கரதாஸ் சுவாமிகள் சிலைக்கு மாலை அணிவித்தார்.
இந்நிகழ்ச்சிக்கு இராதே அறக்கட்டளை நிறுவனர் பொறியாளர் இராதே முன்னிலை வகித்தார். பேராசிரியர் இளங்கோ, பாரதிதாசன் பேரன் செல்வம், புதுவைத் தமிழ்நெஞ்சன், தி.கோவிந்தராசு, தமிழர் களம் அழகர், ஓவியர் இராசராசன் உட்படப் பலர் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியில் எதிர்க்கட்சித் தலைவர் சிவா பேசுகையில், "தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள் 19ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் தமிழ் நாடக உலகின் முக்கிய நபர்களில் ஒருவராக இருந்துள்ளார். குறிப்பாக கூத்து மரபிலிருந்து நாடக அரங்கிற்கு உருமாறியதில் சங்கரதாஸ் சுவாமிகள் முக்கியப் பங்காற்றியவர். தமிழ் நாடகத் தலைமையாசிரியர் என்றும் அழைக்கப்பட்டு வருகிறார்.
நவம்பர் 13ஆம் தேதி வரும் அவரது நினைவு தினத்தை மட்டும் அரசு கடைப்பிடித்து அஞ்சலி செலுத்தி வருகிறது. பொதுவாகத் தலைவர்களின் பிறந்த நாள், நினைவு நாள் இரண்டுமே அரசால் கடைப்பிடிக்கப்படும். ஆனால், சங்கரதாஸ் சுவாமிகளின் பிறந்த நாள் அரசால் கொண்டாடப்படாமல் புறக்கணிக்கப்பட்டு வருகிறது. இது முறையல்ல. எனவே சங்கரதாஸ் சுவாமிகள் பிறந்த நாள் விழாவையும் அரசு விழாவாகக் கொண்டாட வேண்டும்" என்று குறிப்பிட்டார்.