விநாயகர் சிலைகள் செய்யும் 3,000 தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணம் ரூ.10,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என, முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
நாடு முழுவதும் வரும் 10-ம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி, பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடக் கூடாது, ஊர்வலமாகச் சென்று நீர்நிலைகளில் விநாயகர் சிலைகளைக் கரைக்கக் கூடாது, வீடுகளில் மட்டுமே விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாட வேண்டும் எனக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
அருகில் உள்ள நீர்நிலைகளில் தனிநபராகச் சென்று வழிபட்ட விநாயகர் சிலைகளைக் கரைக்கவும், கோயில்களின் சுற்றுப்புறத்திலும் வெளிப்புறத்திலும் சிலைகளை வைத்துவிட்டுச் செல்லவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இக்கட்டுப்பாடுகளை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தமிழக அரசு தெரிவித்தது.
இந்நிலையில், தமிழக அரசின் கட்டுப்பாடுகளாலும், கரோனா காலமாக இருப்பதாலும், விநாயகர் சிலைகள் செய்யும் மண்பாண்டத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், விநாயகர் சிலைகள் செய்யும் 3,000 தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணம் ரூ.10,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என, முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக, முதல்வர் ஸ்டாலின் இன்று (செப். 07) சட்டப்பேரவையில் பேசியதாவது:
"தமிழகத்தில் மண்பாண்டத் தொழிலில் ஈடுபட்டு வரும் சுமார் 12,000 மண்பாண்டத் தொழிலாளர்கள் மழைக் காலங்களில் தொழில் செய்ய முடியாத நிலையில், அவர்களுக்கு நிவாரணமாக ரூ.5,000 தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. இவர்களுள் சுமார் 3,000 தொழிலாளர்கள் திருவிழாக் காலங்களில் விநாயகர் சிலைகளைச் செய்யும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்ற ஆண்டும் இந்த ஆண்டும் கரோனா நொய்த்தொற்றின் காரணமாக, பொது இடங்களில் விழாக்களைக் கொண்டாடத் தடை விதிக்கப்பட்ட நிலையில், தங்களின் தொழிலை மேற்கொள்ள முடியாத நிலையில், அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனை இந்த அரசு கருத்தில் கொண்டு 3,000 தொழிலாளர்களுக்கு மழைக்கால பாதிப்பு நிவாரணத் தொகை போக கூடுதலாக, மேலும் ரூ.5,000 நிவாரணத் தொகை அளிக்கப்பட்டு, மொத்தம் ரூ.10,000 அவர்களுக்கு வழங்கப்படும்".
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.