சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது மனிதநேய மக்கள் கட்சி உறுப்பினர் ஜவாஹிருல்லா பேசும்போது, ‘‘தமிழகத்தில் 7,500-க்கும் மேற்பட்ட வக்புகள் உள்ளன. அவற்றுக்கு சொந்தமான சொத்துகள் தற்போது எங்கு உள்ளன, குத்தகை, வாடகைதாரர்கள் யார் என்ற விவரம் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், அந்த விவரங்கள் எதுவும் இணையதளத்தில் இல்லை.வக்பு சொத்துகள் வகை மாற்றம்செய்வதற்கான தடையில்லா சான்று அதிகாரத்தை மாவட்ட வக்புஆய்வாளர், கண்காணிப்பாளர்களிடம் இருந்து மாற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா?’’ என்றார்.
அதற்கு பதில் அளித்து அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறியதாவது:
மாநில வக்பு வாரியத்தின் இணையதளத்தில் விவரங்கள் அளிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் 7,250 சன்னி, 202 ஷியா என7,452 வக்புகளுக்கு சொந்தமாக 53,428 சொத்துகள் உள்ளன. 7,452 வக்புகளில் 2,814 பதிவுசெய்யப்பட்டுள்ளன. 4,628 வக்புகள் பதிவு செய்யப்படவில்லை. வக்பு பதிவு தொடர்பாக அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில் 1,303வக்புகளுக்கு அதற்குரிய தகவல்அனுப்பப்பட்டது. இதில், 450 நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளன. ஆவணங்களை ஆய்வு செய்து மற்றவற்றையும் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
வக்பு ஆய்வாளர்கள் முறைகேடாக, தவறான தகவல்களை அளித்து வக்பு சொத்துகளை வகைமாற்றம் செய்வதாக புகார்கள் வந்துள்ளன. அதன் அடிப்படையில்ஆக்கிரமிப்பில் இருந்த பல சொத்துகள் மீட்கப்பட்டுள்ளன. நிலங்களை வகை மாற்றம் செய்வது தொடர்பாக குழு அமைத்து நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.