கோடநாடு எஸ்டேட் கொலை மற்றும் கொள்ளை வழக்கு தொடர்பாக மாவட்ட ஊராட்சிதலைவரும், கோடநாடு ஊராட்சியின் முன்னாள் தலைவருமான பொன்தோஸ் கூறியதாவது:
ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது ஒருநாள் இரவு பங்களாவுக்குள் கொள்ளை சம்பவம் நடைபெற்றுள்ளது. அப்போது கோடநாடு எஸ்டேட்டில் தேயிலைதொழிற்சாலை இரவு இயங்கி கொண்டிருந்த நிலையில், சிலபணியாளர்கள் எஸ்டேட் பகுதிக்குசென்றபோது கொள்ளையர்களை பார்த்து விரட்டி அடித்துள்ளனர்.
இதை அப்போது காவல்துறையிடம் தெரிவித்தும், அது குறித்து சோலூர்மட்டம் போலீஸார் எவ்வித வழக்கும் பதிவு செய்யாமல் மூடி மறைத்துள்ளனர். அத்துடன் கொலை, கொள்ளை சம்பவம் நடந்த 2017-ம் ஆண்டுஏப்ரல் 24-ம் தேதிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, அதாவது 21-ம் தேதி கோடநாடு பகுதிக்குபோடப்பட்டிருந்த காவல்துறையினரின் பாதுகாப்பை, அப்போதைய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா உத்தரவின்பேரில் சோலூர்மட்டம் போலீஸார் விலக்கிக் கொண்டனர்.
கோடநாடு எஸ்டேட்டில் 15 பேர் இரவும் பகலும் மாறிமாறி தொடர்ந்து காவலில் ஈடுபட்டிருந்த நிலையில், கொள்ளை சம்பவம் நடைபெற்ற அன்று இரண்டு பேர் மட்டுமே எஸ்டேட்டில் இரவு பணியில் இருந்தது எப்படி என்ற சந்தேகம் எழுகிறது.
இவ்வழக்கு விசாரணையில் அப்போது இருந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா, டிஜிபி ராஜேந்திரன், கோவை மண்டல ஐஜி, சோலூர்மட்டம் காவல் ஆய்வாளர் பாலசுப்பிரமணியம் ஆகியோரிடம் தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தினால் பல உண்மைகள் தெரியவரும். கொள்ளை சம்பவத்தில் போலீஸார் 4 கைக் கடிகாரம், கரடி பொம்மை மட்டுமே மாயமானதாக வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
ஆனால் இவ்வழக்கின் முக்கிய குற்றவாளியான சயான், பல்வேறு ஆவணங்களை திருடிச்சென்றதாக வாக்குமூலம் அளித்துள்ளார். இதனால், அப்போதைய காவல்துறையின் உயர் அதிகாரிகள் மிக முக்கிய பிரமுகர் இவ்வழக்கில் இருந்து தப்பிக்க உடந்தையாக இருந்துள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளது. எனவே கட்டாயம் அப்போது இருந்த காவல்துறை அதிகாரிகளை விசாரிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிலையில், கோடநாடு எஸ்டேட்டுக்கு மேல் 3 நாட்களாக ட்ரோன் பறந்ததாக, கோடநாடு எஸ்டேட் மேற்பார்வை அலுவலர் ராமகிருஷ்ணன் சோலூர் மட்டம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.