உலகில் உள்ள அனைத்து அரசுகளும் கடன் பெற்றுத் தான் நிதிப் பற்றாக்குறையை ஈடு செய்கின்றன என நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் நேற்று இடைக்கால பட்ஜெட் மீதான விவாதத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் உறுப்பினர் கே.பால பாரதி பேசும்போது, ‘‘கடந்த திமுக ஆட்சியில் அரசு கடன் ஒரு லட்சத்து ஆயிரத்து 541 கோடியாக இருந்ததை, எதிர்க்கட்சித் தலைவராக இருந்த தற்போதைய முதல்வர் கடுமையாக விமர்சித்தார். ஆனால், தற்போது இந்த ஆட்சியில் கடன் 2 லட்சத்து 47 ஆயிரத்து 31 கோடியாக உயர்ந்துள்ளது’’ என்றார்.
இதற்கு பதிலளித்து நிதி யமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:
14-வது நிதிக்குழுவின் பரிந்துரைப்படி, மாநில மொத்த உற்பத்தி மதிப்பில் நிலுவைக் கடன் விகிதம் அடுத்த 5 ஆண்டு காலத்தில், 25 சதவீதத்துக்குள் இருக்க வேண்டும். கடந்த 2011-12 முதல் இந்த வரம்புக்குள் ளாகவே அரசின் பொதுக்கடன் உள்ளது.
கடந்த 2011-12 முதல் 2014-15 வரையிலான 4 ஆண்டு களில் தமிழகம் பெற்ற நிகர கடன் ரூ.78,617 கோடியே 31 லட்சமாகும். இதே காலத்தில் மூலதன செலவினம் ரூ.78,483 கோடியே 85 லட்சமாக இருந் தது. சாலைகள் அமைத்தல், பாலங்கள் போன்ற மூலதன சொத்துக்களை உரு வாக்கவே கடன் தொகை பயன்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த 2010-11 இறுதியில், மொத்த கடன் நிலுவை, மாநில உற்பத்தி மதிப்பில் 19.54 சதவீதமாக இருந்தது. இது 2014-15ல் 19.10 சதவீத மாக குறைக்கப்பட்டது. 2014-15 வரை தமிழகத்தின் கடன் நிலுவை ரூ.1 லட்சத்து 79 ஆயிரத்து 967 கோடியாக இருந் தது. 2015-16ம் ஆண்டுக்கு நிகரக்கடன் ரூ.30 ஆயிரத்து 446 கோடியே 67 லட்சம் பெறப்படுவதால், ஆண்டு இறுதியில் நிகரக்கடன் ரூ.2 லட்சத்து 11 ஆயிரத்து 483 கோடியாக இருக்கும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கடந்த 15-ம் தேதி வரை தமிழக அரசின் நிகரக்கடன் ரூ.2 லட்சத்து 6 ஆயிரத்து 875 கோடியாகவே உள்ளது.2016-17க்கு பெற உத்தேசித்துள்ள கடன் ரூ.35 ஆயிரத்து 128 கோடியே 59 லட்சத்தையும் சேர்த்து 2017-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதியில் கடன் ரூ.2 லட்சத்து 47 ஆயிரத்து 31 கோடியாக இருக்கும். இது மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பில் 19.62 சதவீதமாக இருக்கும்.
நிதிப் பற்றாக்குறையை ஈடு செய்ய உலகில் உள்ள அனைத்து அரசுகளும் கடன் பெறுகின்றன. கடன் பெற்று, உட்கட்டமைப்பு போன்ற அசையா சொத்துக்களை உருவாக்குவதில் முதலீடு செய்வதால் பொருளாதார வளர்ச்சி தூண்டப்படுகிறது. இது வருவாயை பெருக்கவும், கடனை திருப்பி செலுத்தவும் வழிவகுக்கிறது. எனவே, கடன் நிலுவைத்தொகை உயர்ந் துள்ள போதிலும், வருவாய் பெருக்கத்தின் காரணமாக தவணை தவறாமல் கடன் திருப்பி செலுத்தப்படுகிறது என்றார்.